CSK: ஷாக்கில் சிஎஸ்கே… 5 வீரர்கள் இல்லை – என்ன செய்யப்போகிறார் ருதுராஜ்?

Chennai Super Kings: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப்போட்டிகளும் தற்போது பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணிகளும் குறைந்தபட்சம் 9 போட்டிகளை விளையாடிவிட்ட நிலையில், பிளே ஆப் ரேஸில் எந்தெந்த அணிகள் முதல் நான்கு இடங்களை பிடிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. 

ஒவ்வொரு போட்டிகளும் இனி முக்கியமாக இருக்கும். ஒரு போட்டியின் வெற்றியும், தோல்வியும் நிச்சயம் இனி ராஜஸ்தானை தவிர அனைத்து அணிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். பெங்களூரு, மும்பை அணிகள் 10வது, 9வது இடத்தில் இருப்பதால் அந்த அணிகளுக்கான பிளே ஆப் வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது. ராஜஸ்தான் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு 99 சதவீதம் தகுதிபெற்றுவிட்ட சூழலில், ஏறத்தாழ 7 அணிகள் 3 இடங்களுக்கு போட்டி போடுகின்றன. 

இதுவரை சிஎஸ்கே

குறிப்பாக, நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இந்த தொடரில் ஏற்ற இறக்கத்துடன் விளையாடி வருகிறது. தொடர்ந்து இரு வெற்றிகளுடன் தொடங்கிய சிஎஸ்கே அடுத்து டெல்லி, ஹைதராபாத் அணிகளுடன் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. கொல்கத்தாவை சேப்பாக்கத்திலும், மும்பையை வான்கடேவிலேயே வென்ற சிஎஸ்கே அணி, லக்னோ அணியிடம் அடுத்தடுத்து 2 தோல்வியைச் சந்தித்தது. அடுத்தடுத்து தோல்வியை சந்திக்க நேர்ந்தது. 

பலமான அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை சேப்பாக்கத்தில் வீழ்த்திய சிஎஸ்கே நேற்று பஞ்சாப் அணியிடம் அதே சேப்பாக்கத்தில் பஞ்சராகி நின்றது. அதாவது மொத்தம் 10 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் உள்ளது. இனி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டும் என்றால் சிஎஸ்கே அணி அடுத்து வரும் 4 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். நான்கு போட்டிகளையும் சற்றே அதிக ரன்ரேட்டில் ஜெயித்தால் முதலிரண்டு இடங்களை பிடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. 

அடுத்து பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகளை சிஎஸ்கே சந்திக்கிறது. அதிலும் ராஜஸ்தான் அணியுடன் மட்டுமே சேப்பாக்கத்தில் மோதுகிறது, மற்ற அனைத்து போட்டிகளும் அவே போட்டிகள்தான். எனவே சிஎஸ்கேவின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு சற்று கடினமாகியுள்ளது. அந்த வகையில், நேற்றைய பஞ்சாப் போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், அணியின் 5 வீரர்களின் நிலை கவலைக்குரியதாக உள்ளது என தெரிவித்துள்ளார். 

அந்த 5 வீரர்கள்…

அதில்,”தீபக் சாஹர் காயம் கவலையளிப்பதாக உள்ளது. எனவே இன்னும் சாதகமான அறிக்கைக்காக காத்திருக்கிறோம். பிசியோ மற்றும் டாக்டர்கள் அவரை தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். இலங்கையைச் சேர்ந்த இரு வீரர்களும் விசா பெறச் சென்றுள்ளனர். எனவே அவர்களின் விசா செயல்முறை சீராக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர்கள் எங்களின் அடுத்த ஆட்டத்திற்கு வந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். துஷார் தேஷ்பாண்டேவுக்கு காய்ச்சல் வந்ததால், இன்று (அதாவது நேற்று) சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது…” என பேசியிருந்தார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மேலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.