மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருப்பவர் ஆனந்த் போஸ். ஆளுநரும் மாநில அரசுடன் மோதிக்கொண்டுதான் இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக மேற்கு வங்கம் வர இருக்கிறார். அவர் இரவில் ராஜ்பவனில் தங்க இருக்கிறார். இந்த நிலையில், திடீர் திருப்பமாக ராஜ்பவனில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர், ஆளுநர்மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்துள்ளார்.
ராஜ்பவன் வளாகத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அவர் புகார் கொடுத்துள்ளார். உடனே அவரை போலீஸார் ஹரே தெரு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் முறைப்படி ஆளுநர்மீது புகார் கொடுத்துள்ளார். வேலை கொடுப்பதாக கூறி பல சந்தர்ப்பங்களில் ஆளுநர் தன்னை மானபங்கம் செய்ததாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் மீதான புகார் மேற்கு வங்க அரசியலில் புதிய புயலைக் கிளப்பி இருக்கிறது. இப்புகார் குறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி பான்ஜா, “ஆளுநர்மீதான புகார் அதிர்ச்சியளிக்கிறது. இதே ஆளுநர்தான் பெண்கள் உரிமை குறித்துப் பேசினார். அவர் இப்போது வெட்கக்கேடான காரியத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் ஆளுநர் பதவிக்கு களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். ஒரு ஆளுநர் இது போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவதை விட வெட்கக்கேடானது வேறு எதுவும் இருக்க முடியாது, அதுவும் ராஜ் பவனில்… இன்று பிரதமர் மாநிலத்திற்கு வருகிறார், அவர் ராஜ்பவனில் தங்குவார். இந்த விஷயத்தில் அவரது கருத்தை அறிய நாங்கள் அறிய விரும்புகிறோம்” என்றார்.
பத்திரிகையாளரும், அரசியல்வாதியுமான சகாரிகா கோஷும் இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவிதுள்ளார். ஏற்கெனவே கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பாக பா.ஜ.க கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் பிரஜ்வால் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மேற்கு வங்க ஆளுநர்மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் இக்குற்றச்சாட்டை மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் மறுத்துள்ளார். இது தொடர்பாக ராஜ்பவன் தரப்பில் வெளியிடப்பட்ட ட்விட்டர் செய்தியில், “ஆளுநர் ஆனந்த் போஸுக்கு எதிராக அரசியல் கட்சிகளின் ஏஜென்ட் அதிருப்தி ஊழியர்களால், சில இழிவான கதைகள் பரப்பப்பட்டுள்ளன இவ்விவகாரத்தில் ஆளுநருக்கு ஊழியர்கள் துணையாக இருக்கின்றனர். தேர்தல் லாபத்திற்காக என்னை களங்கப்படுத்துவதாக இருந்தால் வாழ்த்துகள். ஆனால் மேற்கு வங்க ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான எனது போராட்டம் தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார். இக்குற்றச்சாட்டால் பிரதமர் ராஜ்பவனில் தங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.