சேலம் / கிருஷ்ணகிரி / தருமபுரி: ஏற்காட்டில் சாரல் மழை பெய்தது, சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சூளகிரியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் மாங்காய்கள் உதிர்ந்தன. தருமபுரி, அரூர், கடத்தூர் பகுதிகளில் சுமார் 6 மாதத்துக்குப் பிறகு மழை பெய்ததால், பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் கோடைவெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட மக்கள் கோடை வாழிடங்களுக்கு ஆர்வமுடன் சுற்றுலா செல்கின்றனர். அதில் முக்கிய இடங்களில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில்வரத் தொடங்கியுள்ளனர். இதனால், ஏற்காடு திருவிழாக் கோலத்தில் காட்சியளிக்கிறது.
இதனிடையே, நேற்று ஏற்காடு வந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு நிலவும் இதமான சீதோஷ்ண நிலையை அனுபவித்தபடி, அங்குள்ள சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். இந்நிலையில், நேற்று மதியத்துக்கு மேல் அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது.
இதனால் மகிழ்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள், மழையில் நனைந்து உற்சாகமடைந்தனர். ஏற்காட்டில் சுற்றுலா சீசன் களைகட்டியுள்ள நிலையில், அங்கு சாரல் மழையும் பெய்யத் தொடங்கியிருப்பது, சுற்றுலாத் தொழிலில் உள்ளவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
சூளகிரியில் ஆலங்கட்டி மழை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி சராசரியாக 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 7 மணி முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், பிற்பகல் 1 மணியளவில், 108 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. இதனால், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதனிடையே, சூளகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும், அப்பகுதியில் பலத்த காற்றுடன் 20 நிமிடம் மழை நீடித்தது. இதேபோல காவேரிப்பட்டணத்திலும் மழை பெய்தது. போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
காற்றுடன் பெய்த மழையால், சூளகிரி அருகே ஒமதேப்பள்ளி கிராமத்தில் உள்ள தோட்டங்களில் மாமரங்களில் இருந்த மாங்காய்கள் உதிர்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேலும், தக்காளி, கத்திரி உள்ளிட்ட செடிகளும் காற்றுக்குச் சேதமாகின. குண்டுகுறுக்கிப் பகுதியில் வீசிய காற்றுக்கு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால், அப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
ஓசூரில் 20 நிமிடம்… இதேபோல, ஓசூர் பாகலூர் பகுதியில் நேற்று மதியம் 20 நிமிடத்துக்கும் மேல் கோடை மழை பெய்தது. இதேபோல, அஞ்செட்டி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால், ஓசூரில் கோடை வெயில் உஷ்ணம் சற்று தணிந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தருமபுரியில் சாரல் மழை: தருமபுரி மாவட்டத்தில் 48 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்சமாக 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நேற்று பதிவானது. பகலில் அனல்காற்று வீசியது. அன்றாடப்பணிகளை மேற்கொள்ள முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.
இந்நிலையில் அரூர், சித்தேரி, அனுமன் தீர்த்தம், தருமபுரி, நடுப்பட்டி, செம்மணஅள்ளி, கடத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது.
சுமார் 6 மாதத்துக்கு பிறகு மழை பெய்ததால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கனமழை எப்போது பெய்யும் என்ற ஏக்கத்துடன் மக்கள் காத்திருக்கின்றனர். சூளகிரி அருகே ஒமதேப்பள்ளியில் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழைக்கு உதிர்ந்த மாங்காய்களை வேதனையுடன் காட்டும் விவசாய தம்பதி.ஏற்காட்டில் நேற்று பெய்த சாரல் மழையின்போது, அழகுடன் காட்சியளித்த அண்ணா பூங்காவின் ஒரு பகுதி.