ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை; ஆரஞ்சு எச்சரிக்கை

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மத்தியில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது. இரண்டு வாரங்களுக்கு பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கனமழையுடன் இடி, மின்னல் ஆகியவையும் ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய கூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. குடியிருப்புவாசிகள், வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

பொது துறை மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரிவோர் வீட்டில் இருந்து பணிபுரியும்படியும் கூறப்பட்டு உள்ளது. இதேபோன்று, மாணவர்களின் பாதுகாப்புக்காக அவர்கள் ஆன்லைன் வழி கல்வியை பெறவும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பூங்காக்கள், பீச்சுகள் ஆகியவை தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டு உள்ளன. தேவையின்றி வாகன பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

கனமழையால், நீர் தேங்கி காணப்படும் சூழலில், விபத்துகளை குறைக்கும் நோக்கில் சில சாலைகள் மூடப்பட்டன. நகரங்களுக்கு இடையேயான பஸ் சேவைகளும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளன.

நேற்றிரவு முதல் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து, துபாயில் மழைப்பொழிவு அதிகரித்தது. அதிகாலை 2.35 மணியளவில் இடி, மின்னலும் ஏற்பட்டது. இந்த நிலைமை தொடர கூடிய சூழலில், அவசரகால சேவைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 1949-ம் ஆண்டுக்கு பின்பு, கடந்த இரு வாரங்களுக்கு முன் ஏப்ரலில் அதிக அளவில் கனமழை பொழிந்துள்ளது என பதிவானது. இதனால், சர்வதேச போக்குவரத்து அதிகம் நடைபெற கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. விமான சேவை ரத்து, காலதாமதம் என பயணிகள் அதிக இடையூறுகளை எதிர்கொண்டனர்.

துபாயில் உள்ள துபாய் மால், அமீரக மால் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய கட்டிடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. துபாயின் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வெள்ள நீர் புகுந்தது. துபாய் மட்டுமின்றி பஹ்ரைன் மற்றும் ஓமனிலும் புயலால் வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. எனினும், கடந்த மாதம் ஏற்பட்ட அளவுக்கு பாதிப்புகள் இருக்காது என கூறப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.