கராச்சி,
50 ஓவர் போட்டியாக நடைபெறும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடர் இந்த முறை பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான போட்டி அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு வார காலம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான போட்டிகளை கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும் இந்த தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? இல்லையா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடர்களில் ஆடுவதில்லை. அந்த அணிகள் ஐ.சி.சி தொடர்கள், ஆசிய கோப்பை தொடர்களிலேயே ஆடி வருகின்றன. சமீபத்தில் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற்ற நிலையில் அங்கு தாங்கள் வரமாட்டோம் என இந்தியா அறிவித்ததால், இந்தியா விளையாடிய போட்டிகள் மட்டும் இலங்கையில் நடைபெற்றது.
ஆனால், 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கும் சமயத்தில் இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா வேறு எங்கும் அலையாமல் பாதுகாப்புடன் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய முடியும் என்று இந்த நிலைப்பாட்டை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் லாகூரில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்தியாவுக்கு அருகில் லாகூர் இருப்பதால் பெரும்பாலான ரசிகர்கள் இங்கு வருவதற்கு எளிதான சூழலாக இருக்கும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்புகிறது. இந்தியாவைத் தவிர மற்ற அணிகள் விளையாடும் போட்டியை கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.