பீஜிங்,
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஜோவு நகர நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் அங்கு சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் அடுத்தடுத்து பாய்ந்தன.
இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பள்ளத்தில் சிக்கிய வாகனங்களை மீட்கும் பணியில் அவர்கள் துரிதமாக செயல்பட்டனர். அதன்படி 30-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல வாகனங்கள் மண்ணில் புதையுண்டு இருப்பதால் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.