பெய்ஜிங்: தென்கிழக்கு சீனாவின் குவாங்டாங் மாகாணம் மெய்சூ நகரில் கடந்த புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
குவாங்டாங் மாகாணத்தின் மலைப் பகுதிகளில் கடந்த 1 மாதமாக பெய்த கனமழைக்கு பிறகு இந்தப் பேரிடர் நிகழ்ந்தது. சுமார் 18 மீட்டர் நீளத்துக்கு சாலை இடிந்து, மலைச்சரிவில் விழுந்ததில் 20-க்கும் மேற்பட்ட கார்கள் இடிபாடுகளில் சிக்கின. சில கார்கள் தீப்பற்றி எரிந்தன.
தகவலின் பேரில் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்தப் பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 48 ஆக உயர்ந்தது.
இது தொடர்பாக மெய்சூ அதிகாரிகள் கூறும்போது, “உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினர் எவரும் கண்டறியப்படவில்லை. காயம் அடைந்தவர்களில் 30 பேரின் உயிருக்கு ஆபத்தில்லை. இன்னும் மூன்று பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை” என்றார்.