மக்களவை தேர்தலில் டீஃப் பேக் (ஒருவரின் உருவத்தை மற்றொருவரின் உருவத்தோடு நம்பக்கூடிய வகையில் மாற்றியமைப்பது) தொழில்நுட்பம் பொது நடவடிக்கை மற்றும் ஜனநாயக நடைமுறைக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அரசியல் வேட்பாளர்கள் அல்லது பொதுப் பிரமுகர்கள் தொடர்பான டீஃபேக் உள்ளடக்கத்தை அகற்ற சமூக ஊடக தளங்களுக்கு வழிகாட்டவும், அதுதொடர்பான விதிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கவும் மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பி.எஸ். அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: தேர்தலுக்கு மத்தியில் டீஃபேக் தொழில்நுட்பம் தொடர்பாக எந்த கொள்கையும் வகுக்க முடியாது.
இந்த மனு மிக தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பில் நீதிமன்றம் தலையிடுவது சரியாக இருக்காது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை உள்ளது. டீஃபேக் தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வழிகாட்டுதலை தேர்தல் ஆணையம் வழங்க ஏதுவாக வழக்கறிஞர்கள் சங்கம் உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.