தலித், பிற்படுத்தப்பட்டோர் இல்லாத நாட்டைதான் மோடி அரசு விரும்புகிறது – மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா,

மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார். இந்த பிரசாரங்களில் அவர் மத்திய பா.ஜனதா அரசை கடுமையாக சாடி வருகிறார்.

அந்தவகையில் நாடியா மாவட்டத்தின் டெகட்டாவில் கட்சியின் முன்னாள் எம்.பி. மஹூவா மொய்த்ராவை ஆதரித்து நேற்று பிரசாரம் மேற்கொண்ட அவர், பா.ஜனதாவின் பொது சிவில் சட்டத்தை முன்வைத்து கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “பொது சிவில் சட்டம் அனைத்து பிரிவினருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என பிரதமர் மோடி பொய் கூறி வருகிறார். ஆனால் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால், தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் இருப்பை ஆபத்தில் ஆழ்த்தி விடும்.

இந்த பிரிவினரின் உரிமைகளில் பொது சிவில் சட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இல்லாத நாட்டைதான் மோடி அரசு விரும்புகிறது.

பழங்குடியினர் உள்பட பல்வேறு பிரிவினர் தங்கள் சடங்கு முறைகளை பின்பற்ற பொது சிவில் சட்டம் அனுமதிக்காது. அரசியல் சாசனத்தை பா.ஜனதா அழித்து விடும். ஆனால் நாங்கள் அதை அனுமதிக்கமாட்டோம்.

குடியுரிமை திருத்தச்சட்டம் மூலம் மதுவாக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் குடியுரிமை பெறுவார்கள் என பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக பொய்களை பரப்பி வருகிறது. ஏற்கனவே குடியுரிமை அனுபவித்து வரும் ஒருவரின் குடியுரிமையை பறித்து முகாம்களுக்கு அனுப்பி வைப்பதற்கே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

வாக்குப்பதிவு முடிந்து 4 நாட்களுக்குப்பிறகு வாக்கு சதவீதத்தை அதிகரித்து தேர்தல் கமிஷன் அறிவித்து இருக்கிறது. பா.ஜனதாவின் இந்த தந்திரம் தொடர்பாக மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மாநில மந்திரிகள், அதிகாரிகள் மற்றும் மக்களை அச்சுறுத்துவது, மிரட்டுவது, அழுத்தம் கொடுப்பது போன்ற மோடி அரசின் நடவடிக்கைகள் மேற்கு வங்காளத்தில் செல்லுபடியாகாது” என்று மம்தா பானர்ஜி கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.