Mustafizur Rahman CSK 2024 Latest Updates: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ ஆகிய அணிகள் தற்போதைய நிலையில் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன. சென்னை, டெல்லி, பஞ்சாப், குஜராத் அணிகளும் பிளே ஆப் ரேஸில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பல அணிகள் 10 லீக் போட்டிகளை விளையாடிவிட்டாலும் சில அணிகள் 9 போட்டிகளிலேயே விளையாடி உள்ளது. டெல்லி அணி மட்டும் 11 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இதில் மும்பை, பெங்களூரு அணிகள் மட்டும் முறையே 9வது, 10வது இடங்களில் உள்ளன. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் நோக்கி தங்களின் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தாலும் வீரர்கள் காயமும், வீரர்களின் வெளியேற்றமும் பெரிய தலைவலியை அணிகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
கிளம்பினார் முஸ்தபிசுர் ரஹ்மான்
இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடன் மே 22ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி உள்ளது. இதற்காக டி20 உலகக் கோப்பைக்கு தேர்வான அதே 15 வீரர்கள் கொண்ட ஸ்குவாட் தான் இந்த தொடரிலும் விளையாட உள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜாஸ் பட்லரும், துணை கேப்டனாக மொயின் அலியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி பில் சால்ட், வில் ஜேக்ஸ், ரீஸ் டோப்ளி, சாம் கரன், லியம் லிவிங்ஸ்டன், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரும் இந்த ஸ்குவாடில் உள்ளனர்.
எனவே, கேகேஆர், ஆர்சிபி, பஞ்சாப், ராஜஸ்தான், சிஎஸ்கே ஆகிய அணிகளுக்கு இது பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம். குறிப்பாக, சிஎஸ்கே அணி சமீபத்தில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்று வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் வங்கதேசம் – ஜிம்பாப்வே இடையிலான டி20 தொடரை விளையாட இருப்பதால் அவர் சிஎஸ்கே அணியை விட்டு வெளியேறுகிறார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியே அவர் விளையாடிய கடைசி போட்டியாகும்.
உணர்ச்சிப்பூர்வமான ட்வீட்
இந்நிலையில், சிஎஸ்கே அணியிடம் இருந்த விடைபெற்ற அவர் இன்று வங்கதேசத்திற்கு புறப்பட்டார். அவர் புறப்படுவது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அதில் தோனி அவர் கையொப்பமிட்ட டீ-சர்டை பரிசாக கொடுத்த புகைப்படத்தையும் இணைத்துள்ளார். அந்த பதிவில்,”எல்லாவற்றிற்கும் நன்றி மஹி பாய் (தோனி).
View this post on Instagram
உங்களைப் போன்ற ஜாம்பவானுடன் ஒரே டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டது ஒரு சிறப்பு உணர்வாகும். ஒவ்வொரு முறையும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் மதிப்புமிக்க டிப்ஸ்களையும் பாராட்டுகிறேன், நான் அந்த விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்கிறேன். விரைவில் உங்களை மீண்டும் சந்தித்து விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.