’மேதகு’, ‘மேதகு 2’ ’கக்கன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இசைமைப்பாளர் பிரவீன் குமார் இளம் வயதிலேயே உயிரிழந்த சம்பவம் திரைத்துறையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் போராட்ட வாழ்க்கையை மையப்படுத்திய ’மேதகு’ படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் உலகத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரமித்து பேசப்பட்டதோடு, பாடல்களும் இசையும் பாராட்டுகளை குவித்தன. இந்த நிலையில், பிரவீன் குமார் இசையமைப்பாளராக அறிமுகமான ’மேதகு’ படத்தின் இயக்குநர் கிட்டுவிடம் பிரவீன் குமாரின் திடீர் மறைவு குறித்துப் பேசினேன்…
“பிரவீனுக்கு இசைதான் உயிர். இதுக்கே, அவர் முறைப்படி சங்கீதமெல்லாம் கற்றுக்கல. அவங்க அப்பாவும் அவரோட ப்ரெண்ட்ஸும் வெச்சிருந்த ஆர்கெஸ்ட்ரா ட்ரூப்ல, பத்து வயசிலேர்ந்தே உட்கார்ந்து பார்த்து இசையில ஆர்வம் வந்ததுதான். அவங்கக்கிட்டேயே பியானோ, ஃப்ளூட் அப்படின்னு படிப்படியா எல்லாத்தையும் கற்றுக்கிட்டாரு.
அவருக்குள்ள இருந்த பேரார்வத்தாலதான், முறைப்படி சங்கீதம் கற்றுக்காமலேயே இவ்ளோ பியூட்டிஃபுல்லா இசைமைக்க முடிஞ்சது. ஆர்கெஸ்ட்ராவுல ஆரம்பிச்சு சின்ன சின்ன குறும்படங்களுக்கு இசைமைச்சிக்கிட்டிருந்திருக்காரு. அப்படித்தான், என்னோட குறும்படத்தின் மூலமா எனக்கு நண்பரானார் பிரவீன். அவருடைய திறமையைப் பார்த்து வியந்துதான், நான் முதல் முதலா இயக்கின ’மேதகு’ படத்தில் அவரை இசையமைப்பாளர் ஆக்கினேன்.
‘மேதகு’ திரைப்படம் உண்மை சம்பவங்களையும் மக்களின் உரிமைப் போராட்டங்களையும் மையப்படுத்திய உணர்வுப்பூர்வமான கதை. அதற்கான, இசை என்பது வழக்கமான சினிமா பாணியில் இல்லாமல் உண்மையான வலியை மக்களுக்குக் கடத்தக்கூடியதா இருக்கணும். அதற்கு, வெறும் இசையமைப்பாளராக மட்டுமே இருந்தால் போதாது. இசையமைப்பவரும் அந்த உணர்வை உள்வாங்கியவராகப் புரிந்துகொண்டவராக இருக்கணும்.
பிரவீன், தமிழீழ மக்கள் மீது அக்கறைகொண்ட உணர்வாளர். அதனாலதான், நாம எதிர்பார்த்ததைவிட மிகச்சிறப்பா இசையமைச்சுக் கொடுத்தாரு. குறிப்பா, ‘பழி தீர்க்கவா’ பாடல் ஹிட். பாரதிதாசனின் ’தமிழுக்கு அமுதென்று பேர்’ பாடலை முழுக்க முழுக்க நாதஸ்வரம், பறையைப் பயன்படுத்தி எழுச்சியான பாடலாக உருவாக்கினார். அந்தப் பாட்டுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைச்சது.
நான் இரண்டாவது படம் இப்போ இயக்கி முடிச்சிருக்கேன். இந்தப்படத்துக்கும் அவரை கமிட் பண்ணலாம்னு நினைச்சப்போ, ப்ளாக்ஷீப்புல இரண்டு வெப் சீரிஸ்ல கமிட் ஆகியிருந்தாரு. அடுத்தடுத்த படங்களிலும் பிஸியா இருந்தாரு. அடுத்த படத்துக்கு அவரைக் கமிட் பண்ணணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. ’மேதகு’ படம் டைம்ல மியூசிக் பண்ண அவருக்கு ஸ்டூடியோகூட இல்ல. நாங்கதான், அந்தப் படத்துக்காக சின்னதா ஒரு இடத்தை ரெடி பண்ணிக் கொடுத்தோம். அதுலயே, சிறப்பா பண்ணிக்கொடுத்தார்.
மிக முக்கியமா முழு படத்துக்கும் இசையமைச்ச பிறகுதான் சம்பளமே வாங்கினார். அப்படியொரு, உணர்வாளர். இசைத்துறை மீது மட்டுமில்ல, தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்டிருந்ததால நிதிப் பற்றக்குறை சூழலையெல்லாம் புரிஞ்சுக்கிட்டு ஒர்க் பண்ணிக் கொடுத்தாரு” என்பவரிடம் “28 வயதிலேயே இந்த திடீர் மரணம் ஏன்?” என்று கேட்டோம்.
”அவருக்கு கிட்னியில ப்ராப்ளம் இருந்தது. சரியான நேரத்துக்குச் சாப்பிடாம இருந்ததுதான் காரணம். ஒரு பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருக்கார்ன்னு எனக்கு அஞ்சு நாட்களுக்கு முன்னாடிதான் தகவல் வந்தது. உடல் நலம் தேறி வந்துடுவார்ன்னுதான் நினைச்சோம். ஆனா, லாஸ்ட் ஸ்டேஜு, கவர்ன்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டு போயிடுங்கன்னு சொல்லிட்டாங்க. அப்புறம்தான் தஞ்சாவூர் ஜி.ஹெச்சுக்கு கொண்டுபோய் சேர்த்தோம்.
எப்படியாவது அவரோட உயிரைக் காப்பாத்திடணும்னு முயற்சி எடுத்தோம். ஆனா, முடியல. அபார வளர்ச்சியை நோக்கிப் போய்க்கிட்டிருந்த சூழலில் இப்படி ஆனது, ரொம்பவே வருத்தமாவும் வேதனையாவும் இருக்கு. இதுக்கே ஒரு வருசம் முன்னாடிதான் பிரவீனுக்குத் திருமணம் ஆச்சு. அவரோட மனைவி இதை எப்படித்தான் எதிர்கொள்ளப் போறாங்கன்னே தெரியல. அவங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லி தேற்றுவதுன்னும் தெரியல” என்கிறார் கலங்கியபடி…