“மோடியின் ஈகோவால் அழகான மணிப்பூர் மாநிலம் சேதம்” – கார்கே கண்டனம்

புதுடெல்லி: அக்கறையற்ற மோடி அரசும், திறமையற்ற பாஜக மாநில அரசும் மணிப்பூர் மாநிலத்தையே இரண்டாகப் பிரித்துள்ளன என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மணிப்பூர் சரியாக ஒரு வருடம் முன்பு மே 3, 2023 அன்று எரியத் தொடங்கியது. அக்கறையற்ற மோடி அரசும், திறமையற்ற பாஜக மாநில அரசும் மாநிலத்தை இரண்டாகப் பிரித்துள்ளன. ஒரு துளி வருத்தம் கூட இல்லாத பிரதமர் மோடி இதுவரை மணிப்பூரில் காலடி எடுத்து வைக்கவில்லை.

இது அவரது தகுதியின்மை மற்றும் முழுமையான அலட்சியத்தை அம்பலப்படுத்துகிறது. அவரது ஈகோ ஒரு அழகான மாநிலத்தின் சமூக கட்டமைப்பை சேதப்படுத்தியுள்ளது. மணிப்பூரில் மனிதநேயம் அழிந்தது.

பாஜக எப்படி தங்களது வாழ்க்கையைப் பரிதாபமாக மாற்றியது என்பது மணிப்பூரில் உள்ள அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் தற்போது தெரியும். 220 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 60,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அதோடு பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இன்னும் முகாம்களில் தவித்து வருகின்றனர்.

மணிப்பூரின் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டனர். பல்வேறு கொடூரமான சம்பவங்கள் நடந்தன. ஆனால் பிரதமர் மோடி அமைதியாக தான் இருந்தார். மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

நினைத்துப் பார்க்க முடியாத இந்த வன்முறையை எதிர்கொண்டு, இன்னும் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கையின் ஒளியைத் தேடிக் கொண்டிருக்கும் எண்ணற்ற அப்பாவி உயிர்களுக்கு எங்கள் அஞ்சலியைச் செலுத்துகிறோம். பாஜகவால் மணிப்பூரில் இயல்பு நிலையும், அமைதியும் பறிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.