ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்

ரேபரேலி: உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கலின்போது அவருடன் தாய் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இன்று காலை, “மத்திய தேர்தல் குழு கூட்டத்தில், 2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி வேட்பாளராகவும், அமேதி தொகுதிக்கு கிஷோரி லால் சர்மா வேட்பாளராகவும் அறிவிக்கப்படுகின்றனர்” என்று பதிவிடப்பட்டிருந்தது.

உத்தரப் பிரதேசத்தில் காந்தி குடும்பத்தின் ஆஸ்தான தொகுதிகளாக இருப்பது அமேதி மற்றும் ரேபரேலி. அமேதியில் கடந்த 1967 முதல் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது. 1980-ல் சஞ்சய் காந்தி மூலமாக அமேதி காங்கிரஸ் தலைமையின் குடும்பத் தொகுதியாக மாறியது. அதே வருடம் சஞ்சய் காந்திக்கு பின் அங்கு வந்த இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி தொடர்ந்து 1984, 1989, 1991 வரை எம்பியாக இருந்தார். அவரது மறைவால் வந்த இடைத்தேர்தலில் காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான கேப்டன் சதீஷ் சர்மா போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இதற்கு அடுத்து வந்த 1996 பொதுத் தேர்தலிலும் சர்மா, அமேதி எம்பியானார். பிறகு 1998-ல் பாஜகவின் சஞ்சய் சிங் கைக்கு அமேதி மாறியது.

அமேதி களத்தில் 1999-ல் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியால், மீண்டும் அது காங்கிரஸ் வசமானது. இவர், அடுத்த தேர்தலில் அருகிலுள்ள ரேபரேலிக்கு மாறிவிட, அமேதியில் ராகுல் 2004-ல் முதன்முறையாக களம் இறங்கினார். அடுத்து வந்த 2009, 2014, 2019 மக்களவை தேர்தலிலும் என அமேதியில் மூன்று முறை தொடர்ந்தார் ராகுல். இதில், 2014 முதல் பாஜவுக்காக ராகுலை எதிர்த்த மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி, 2019-ல் ராகுலை தோற்கடித்தார்.

கடந்த 2002 முதல் அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டதால் அங்கு வெற்றி பெற்றதை அடுத்து அவர் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து இருந்து வருகிறார். ரேபரேலியில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். தற்போது அவரும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிவிட்டார். இந்நிலையில், ராகுல் காந்தி ரேபரேலியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.