நியூயார்க்,
சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட கிரகங்களுக்கு இடையே சிறுகோள்கள் சுற்றி வருகின்றன. இவற்றை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டது. இந்த விண்வெளி திட்டத்தின்படி, சைக் 16 என பெயரிடப்பட்ட சிறுகோளை ஆய்வு செய்ய 2023-ம் ஆண்டு அக்டோபரில் விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு நாசா அனுப்பியது.
பொதுவாக சிறுகோள்கள் பெரிய கற்களால் ஆனவை. ஆனால், இந்த சிறுகோளானது உலோகங்களால் உருவாகி இருக்கும் என நம்பப்படுகிறது. இது சூரிய குடும்பத்தில் அரிய ஒன்றாகும். செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களுக்கு இடையே இந்த சிறுகோள் உள்ளது என கூறப்படுகிறது.
சிறுகோளின் பெயரை ஒட்டி இந்த புதிய விண்கலத்திற்கு சைக் என நாசா பெயர் சூட்டியது. இந்த விண்கலம் லேசர் தொலைதொடர்பு பற்றிய பரிசோதனையிலும் ஈடுபடும் பணியை மேற்கொண்டு உள்ளது. இதற்காக டி.எஸ்.ஓ.சி. எனப்படும், விண்வெளியின் ஆழ்ந்த ஒளி வழியான தொலைதொடர்புகளை கண்டறியும் சாதனம் சைக் விண்கலத்தில் உள்ளது.
இதன் உதவியால் விண்வெளியில், தொலைதூரத்தில் இருந்து கொண்டு லேசர் வழியேயான தொலைதொடர்புகளை ஏற்படுத்துவது சாத்தியப்படும். விரைவில் இணைப்பை மேற்கொள்ளவும் வழிவகுக்கும். சைக் விண்கலம் ரேடியோ அலைவரிசை தொலைதொடர்பை முதலில் பயன்படுத்தி வந்தது.
இந்த நிலையில், டி.எஸ்.ஓ.சி. தொழில்நுட்பம் அதன் திறனை நிரூபித்துள்ளது. இது நாசா விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன்படி, 14 கோடி மைல் தொலைவில் இருந்து அந்த விண்கலம் பொறியியல் சார்ந்த தகவல்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது. இந்த தொலைவானது பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவை போன்று 1.5 மடங்கு கொண்டது.
இந்த டி.எஸ்.ஓ.சி. சாதனம் ஆனது, சைக் விண்கலத்தின் ரேடியோ டிரான்ஸ்மிட்டருடனும் தொடர்பு கொண்டு அதில் வெற்றியடைந்து உள்ளது. இதனால், விண்வெளியில் இருந்து தகவல் மற்றும் தரவுகளை நேரடியாக பூமிக்கு அனுப்ப முடிந்தது. எனினும், அந்த விண்கலம் அதிக தொலைவுக்கு சென்று விட்டது. அதனால், அதன் தகவல் பரிமாற்ற விகிதம் குறைவாக உள்ளது.
ஆனால், இந்த திட்டத்தின் இலக்கை விட 25 மடங்கு கூடுதலான விகிதத்தில் தரவுகளை பரிமாறி விண்கலம் சாதனை படைத்துள்ளது. அதனுடன், சைக் 16 சிறுகோளை நோக்கிய தன்னுடைய பயணத்தில் தொடர்ந்து, நிலையாக மற்றும் இயல்பாக சைக் ஈடுபட்டு வருகிறது.