விழுப்புரம் அருகே ஆதித்த கரிகாலன் கல்வெட்டு கண்டெடுப்பு: பேராசிரியர் தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள ஏமப்பூர் கிராமத்தில் வேதபுரீஸ்வரர் கோயிலில் திருப்பணியின்போது ஆதித்த கரிகால சோழனின் கல்வெட்டை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், பட்ட ஆய்வாளர் இமான் உள்ளிட்ட குழுவினர் கண்டறிந்தனர்.

இது குறித்து பேராசிரியர் ரமேஷ் கூறியது: ”சோழ மன்னன் சுந்தர சோழனின் மகனும் புகழ்பெற்ற சோழ மன்னன் ராஜராஜனின் மகனுமான ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னன் வீரபாண்டியன் போரில் தோற்கடித்து அவன் தலையை வெட்டிக் கொண்டு வந்து தஞ்சை அரண்மனை முன்பு சொருகி வைத்தான் என்று திருவாலங்காடு, எசாலம், லெய்டன் ஆகிய செப்பேடுகள் கூறுகின்றன. எனவே இவன் வீரபாண்டியன் தலை கொண்ட கொப்பர கேசரி என்று அழைக்கப்பட்டான்.

சுந்தர சோழன் தன் மகன் ஆதித்த கரிகாலனுக்கு தொண்டை மண்டலம், திருமுனைப்பாடி ஆகிய பகுதிகளை ஆளும் உரிமையை வழங்கி இருக்கிறான். எனவே தான் இப்பகுதியில் இவனது கல்வெட்டுகள் கிடைக்கின்றன. ஏற்கெனவே பேரங்கியூர், திருமுண்டீஸ்வரம் போன்ற இடங்களில் கிடைத்திருக்கிறது. தற்போது மேலும் ஒரு கல்வெட்டு கிடைத்திருக்கிறது.

இக்கல்வெட்டு ‘ஸ்வஸ்தி ஸ்ரீ வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி’ என்று தொடங்குகிறது இவனது நான்காவது ஆட்சி ஆண்டான பொது ஆண்டு 960 பொறிக்கப்பட்ட கல்வெட்டு திரு முனைப்பாடி நாட்டில் ஏமப்பேரூர் நாட்டு ஏமப்பேரூர் என்று இவ் ஊரை அழைக்கிறது. இது ஒரு நாட்டின் தலைமையிடமாக விளங்கி இருக்கிறது.

ஏமப்பேரூர் என்பதே தற்போது ஏமப்பூர் என்று மருவி அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வூர் திருவாலந்துறை ஆழ்வாருக்கு இவ்வூர் மன்றாடி நிகரிலி மூர்த்தி சூரியன் சந்திரர் உள்ளவரை ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காக 96 ஆடுகளை இக்கோயிலை நிர்வகித்த பன் மாகேஸ்வரர் வசம் ஒப்படைத்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவற்றில் இருந்து ஆதித்த கரிகாலன் இப்பகுதியை ஆட்சி புரிந்ததையும் அறிய முடிகிறது.

மேலும், இவன் சதியால் கொல்லப்பட்டான் என்பதை காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் கல்வெட்டு குறிப்பிட்டதோடு அவர்களின் பெயர் பட்டியலையும் தெளிவாக தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு தமிழக சோழர் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.