நிலத்திலும் நீரிலும் வாழும் ‘பாக்’ என்ற அமானுஷ்ய தீயசக்தியானது பிரம்மபுத்திரா நதிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்பாராத நிகழ்வாக ‘பாக்’ நதியிலிருந்து தப்பித்துவிடுகிறது. மறுபுறம், சென்னையில் தன் அத்தையுடன் (கோவை சரளா) வழக்குரைஞராக வாழ்ந்து வருகிறார் சரவணன் (சுந்தர்.சி). காதல் திருமணம் செய்துகொண்டு, தன்னை விட்டுப் பிரிந்து போன தங்கை செல்வி (தமன்னா) மீது கொள்ளை பாசம். இந்நிலையில், ஒருநாள் அவரது தங்கையும், தங்கையின் கணவனும் (சந்தோஷ் பிரதாப்) இறந்துவிட்டதாகச் செய்தி வரவே, அவர்கள் வாழ்ந்த பழைய அரண்மனைக்குச் செல்கிறார்.
இருவரின் மரணத்திலும் சந்தேகமிருப்பதையும் தங்கையின் குழந்தைகளுக்கு ஆபத்திருப்பதையும் உணரும் சரவணன், அதைக் கலைய முற்படும்போது மர்ம மரணங்களும், அமானுஷ்ய சம்பவங்களும் நிகழ்கின்றன. தொடர் மரணங்களுக்கு யார் காரணம், பாக்கிற்கும் இக்கொலைகளுக்கும் என்ன சம்பந்தம், குழந்தைகளை சரவணன் காப்பாற்றினாரா போன்ற கேள்விகளுக்கு வழக்கமான ‘அரண்மனை ஃபார்முலாவில்’ பதில் சொல்லியிருக்கிறது சுந்தர்.சி-யின் ‘அரண்மனை – 4’.
ஆக்ஷனிலும், ரகளை செய்யும் இடங்களிலும், பதறும் தருணங்களிலும் அளவெடுத்தது போல் நடித்துத் தப்பிக்கும் சுந்தர்.சி, உருக்கமான காட்சிகளில் மேலோட்டமான நடிப்பால் உணர்வுகளைக் கடத்தத் தவறுகிறார். பாசத்தைப் பொழியும் தாயாகவும், பயமுறுத்தும் பேயாகவும் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார் தமன்னா. துணை நடிகர்களில் ராமச்சந்திர ராஜுவின் கதாபாத்திரம் மட்டும் கனமாக எழுதப்பட்டிருக்கிறது. அவரது நடிப்பிலும் குறையேதும் இல்லை. பெரிய வேலை இல்லாத ‘நாயகியின் கணவர்’ கதாபாத்திரத்திற்கு ஓகே ரக பங்களிப்பைத் தந்திருக்கிறார் சந்தோஷ் பிரதாப்.
‘வளவள’ வசனங்களாலும், மிகைநடிப்பாலும் துளைத்தெடுக்கிறார் கோவை சரளா. ஒரு சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறது யோகி பாபு – விடிவி கணேஷ் – டெல்லி கணேஷ் ஆகியோர் அடங்கிய கூட்டணி. க்ளைமாக்ஸில் ஸ்கோர் செய்பவர்கள் மொத்த படத்திலும் அதே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். உருவக்கேலி காமெடிகளை எப்போ விடுவீங்க யோகி? ஜெயபிரகாஷ், ராஷி கண்ணா, சிங்கம் புலி ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
இ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் இரவுநேர திகில் காட்சிகளும், க்ளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகளும் கச்சிதமாக இருக்கின்றன. முதற்பாதியின் ‘இழுவைக்கு’ கடிவாளம் போடத் தவறியிருக்கிறது ஃபென்னி ஆலிவரின் படத்தொகுப்பு. ‘ஹிப்ஹாப்’ ஆதியின் இசையில், மீனாட்சி இளையராஜா குரலில் ‘ஜோ ஜோ ஜோ’ பாடல் ஆறுதல் தர, மற்ற பாடல்கள் காதுகளுக்குக் கொலை மிரட்டல் விடுகின்றன. பரபரப்பான காட்சிகளையும் பதற வைக்கும் நொடிகளையும் மெருகேற்றி படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது ஆதியின் பின்னணி இசை.
‘திகிலான’ ஒரு அரண்மனையை கண்முன் கொண்டு வந்த விதத்தில் குருராஜின் கலை இயக்கம் கவனிக்க வைக்கிறது என்றாலும், அப்பட்டமாக செட்டிங் எனத் தெரியும் காடுகளையும் குகைகளையும் இன்னும் கூடுதல் சிரத்தையுடன் உருவாக்கியிருக்கலாம். நேர்த்தியில்லாத ‘கிராஃபிக்ஸ்’ காட்சிகளிலும் கூடுதல் உழைப்பைப் போட்டிருக்கலாம். அதே சமயம் க்ளைமாக்ஸில் பிரமாண்ட சிலைகள் செட், கோயில் செட், அதற்குள் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் போன்றவை பிரமிப்பூட்டுகின்றன.
பழங்கால அரண்மனை, அமானுஷ்ய சக்திகள், மர்ம மரணங்கள், பாசப் போராட்டங்கள், காமெடியன்கள் கூட்டணியின் சேட்டைகள், மர்மங்களைக் களையக் களமிறங்கும் சுந்தர்.சி, நல்ல அமானுஷ்ய சக்திக்கும் தீய அமானுஷ்ய சக்திக்குமான சண்டை, சுபம் என வழக்கமான அரண்மனை ஃபார்முலாவை வாடகைக்கு எடுத்து, கலர் கலராக வெள்ளையடித்து, சில பல எவர்சில்வர் பாத்திரங்களை அடுக்கி, புது அரண்மனையாக மாற்றி, அதை ஒரு பக்கா கமெர்சியல் என்டர்டெயின்மென்ட்டாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.
‘பாக்’ என்ற அமானுஷ்ய சக்தியைப் பற்றிய அதிரடியான அறிமுகத்தோடு தொடங்கினாலும், தேவையில்லாத ஆக்ஷன், மேம்போக்கான சென்டிமென்ட் காட்சிகள், வழக்கொழிந்து போன டெம்ப்ளேட் காமெடிகள் எனச் சோதிக்கவே செய்கிறது தொடக்கக்கட்டத் திரைக்கதை. அமானுஷ்யத்தை சுந்தர்.சி நெருங்கும்போது சூடு பிடிக்கும் படம், இறுதிக்காட்சி வரை பரபரவென நகர்கிறது. ‘அரண்மனை’ படத்தொடர்களில் வந்த பல காட்சிகளும், பல திருப்பங்களும், பல கதாபாத்திரங்களும் இதிலும் ரிப்பீட் அடிக்கவே செய்கின்றன என்றாலும், ‘பாக்’ என்ற பேய், அதன் குணங்கள், லாஜிக்கே இல்லை என்றாலும் ஓடிக்கொண்டே இருக்கும் பரபர காட்சிகள், பேய்களுக்கு இடையிலான ஆக்ஷன் காட்சிகள் எனச் சுவாரஸ்யமான விஷயங்கள், அந்த ‘வழக்கமான….’ குறைகளை மறக்கடிக்க வைக்கின்றன.
சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி, திகில், விறுவிறு சேஸிங் போன்றவை அடுத்தடுத்து கச்சிதமான அளவில் கோக்கப்பட்டிருப்பதும், அவை ஒர்க் அவுட் ஆகியிருப்பதும் மொத்த படத்தையும் ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ் ஆக மாற்றியிருக்கின்றன. வழக்கமான பேய் ஃப்ளாஷ்பேக்கில் கொஞ்சம் மாற்றங்கள் செய்திருப்பதும் ஆறுதல்.
புதுமையான கதைக்களங்களும், சுவாரஸ்யமான திரைமொழிகளும் வரிசை கட்டி வந்து, சினிமாவின் ரசனையைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு `வழக்கமான’ டெம்ப்ளட் பேய் சினிமாவாக வந்திருக்கும் இந்த `அரண்மனை – 4′, கச்சிதமான ஒரு தியேட்டர் மெட்டீரியலாக மாறியிருப்பதால், ஒருவிதத்தில் அனைவரையும் ரசிக்க வைத்துத் தப்பிக்கிறது.