‘ஸ்ரீகாந்த்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை ஜோதிகா அரசியலுக்கு வருவது குறித்துப் பேசியிருக்கிறார்.
ஜோதிகா ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை மீண்டும் தொடங்கினார். ‘ராட்சசி’, ‘பொன்மகள் வந்தாள்’ என்று பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’ மலையாளத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.இதனைத் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜோதிகா சமீபத்தில் இயக்குநர் விக்ரம்பால் இயக்கிய ‘சைத்தான்’ படத்தில் நடித்திருந்தார்.
தற்போது ‘ஸ்ரீகாந்த்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்திருக்கிறார். மாற்றுத்திறனாளி தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பெல்லா என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி இருக்கிறது. வருகிற 10 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் ஜோதிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது “சமூக பொறுப்பு குறித்து பேசுகிறீர்கள். தேர்தலில் நீங்கள் வாக்களிக்கவில்லை என பலரும் விமர்சித்தார்கள்.
அதற்கு உங்கள் பதில் என்ன?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “எப்போதுமே நான் தவறாமல் ஓட்டு போட்டு விடுவேன். ஆனால் எங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது அல்லவா, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வெளியூர் சென்றிருந்ததால் ஓட்டு போட முடியவில்லை என்று கூறியிருக்கிறார். ’நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டபோது ’யாரும் என்னை கூப்பிடவில்லை, எந்த அரசியல் கட்சியும் என்னை அணுகவில்லை, என்று கூறிய ஜோதிகா, ’இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை.
என்னுடைய இரண்டு குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை கவனிக்கவும் என்னுடைய நடிப்புத் தொழிலை கவனிக்கவும்தான் இப்போதைக்கு எனக்கு நேரம் இருக்கிறது, அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை’ என்று பதிலத்திருக்கிறார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளது குறித்த கேள்விக்கு “அவுட் ஆஃப் தி டாபிக்” என கூறியிருக்கிறார்.
தவிர, ஃபிட்னஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, “ பெண்கள் நாள்தோறும் தங்களுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.