கவின் நடிப்பில் உருவாகியிருக்கிற ‘ஸ்டார்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.
‘ப்யார் ப்ரேமா காதல்’ திரைப்படத்தை இயக்கிய இளன்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மே 10-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் கவின், “டாடா படத்துக்குப் பிறகு இப்போ ஸ்டார். இயக்குநர் இளன் டாடா படத்துக்குப் பிறகுதான் என்கிட்ட வந்து இந்தக் கதை சொன்னாரு. இந்தக் கதை சொல்ல வரும்போது ஸ்கிரிப்ட் புக் எதுவுமே இல்லாமதான் என்கிட்ட வந்து கதை சொன்னாரு. கிட்டதட்ட 3 மணி நேரம் என்கிட்ட இந்த படத்தோட கதையை சொன்னாரு. இதுக்குப் பிறகு யுவன் சார் பத்தி சொல்லியே ஆகணும். நான் விக்ரம் பிரபு சார்கூட ‘சத்ரியன்’னு ஒரு படம் பண்ணியிருந்தேன். அந்த படத்துல எனக்குனு ஒரு பாட்டு இருந்துச்சு. ஆனா, கட் பண்ணிட்டாங்க. இன்னைக்கு நடக்கலைனா நாளைக்கு பெருசா ஒன்னு நடக்கும்னு சொல்வாங்க. அந்த மாதிரிதான் இந்தப் படத்துல அதைவிட பெருசா இசை- யுவன் ஷங்கர் ராஜானு வந்திருச்சு.
எனக்கு நடிப்பு மேல இருக்கிற நம்பிக்கை நடனத்துல இருக்காது. முக்கியமாக, இந்த படத்துல வேலை பார்த்த பலரும் அவங்களோட கரியர்ல அடுத்த கட்டத்துக்கு போவாங்கனு நம்பிக்கை இருக்கு. இந்த படத்தை முதல்ல தொடங்கும்போது சில பேச்சுகள் வந்தது. சினிமா வச்சு சினிமா எடுத்தால் ஓடாதுனு சொன்னாங்க. சில திரைப்படங்கள்தான் ஓடியிருக்கு. அந்தப் பேச்சுகள் இப்போ வரைக்கும் இருக்கதான் செய்யுது.
ஆனா, எங்க தயாரிப்பாளர்கள் அதையெல்லாம் தாண்டி நம்பிக்கை வச்சு இந்த படத்தை பண்ணியிருக்காங்க. சினிமா வச்சு சினிமா எடுத்து ஒடின படங்களோட லிஸ்ட்ல இந்தத் திரைப்படமும் சேரும். ” எனப் பேசியவரிடம் சில கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். பெண் வேடமிட்டு இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றில் நடித்திருந்தார். இது குறித்து அவர், ” அதுக்கு எனக்கு ரெபரென்ஸாக இருந்தது நடிகர் சந்தானத்தோட கரீனா சோப்ரா கதாபாத்திரம்தான். அது கலாட்டாவான கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்தை தோற்கடிக்கவே முடியாது.” என்றார். மேலும், “கோடிக் கணக்கில் சம்பளம் கேட்குறீங்கன்னு ஒரு குற்றச்சாட்டு வந்ததே?” என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், ” நம்ம கேட்கிறோம்னு யாரும் அந்த சம்பளத்தை கொடுத்திட மாட்டாங்க. இப்போ நீங்க ஒரு ஆபீஸ்ல இருந்து அடுத்த ஆபிஸுக்கு வேலைக்கு போகும்போது சம்பளம் அதிகமாகதான் போவீங்க. அது உங்களோட முந்தைய சம்பளத்தை பொறுத்துதான் அதிகமாகும். மார்கெட்தான் சம்பளத்தை தீர்மானிக்கும். இந்தத் திரைப்படம் எனக்கு நான்காவது திரைப்படம். இந்த திரைப்படம் முடிக்கவே எனக்கு ஒரு வருஷம் ஆகிடுச்சு. மத்தபடி, வந்த தகவல்கள் எதுவும் உண்மையல்ல. ” என பேசி முடித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் இளன், ” எனக்கு இது ரொம்பவே எமோஷனல் மொமன்ட். பலருக்கு கார், வீடு வாங்கணும்னு கனவு இருக்கும். அந்த கனவை நோக்கி ஓடுற எல்லோருமே ஸ்டார்தான். 80கள்ல ஒரு பையன் மதுரைல இருந்து சென்னை வர்றான். ஒரு ஸ்டாராகணும்னு வர்றான். 90, 20ஸ்னு வருஷங்கள் போகுது. அதுக்குப் பிறகு அந்த பையனுக்கு ‘ராஜா ராணி’ படத்துல ஒரு வாய்ப்பு கிடைக்குது. அவர்தான் என்னுடைய அப்பா. இந்த முகத்தை வச்சு எப்படி நடிக்க வந்தனு அப்பாவைக் கேட்டதாகச் சொன்னாரு.
அந்த பிடிவாதமான மனதோட என்னோட தந்தை சினிமாவுல தொடர்ந்து முயற்சி பண்ணாரு. அதே மாதிரியான கதைதான் ஸ்டார். நான் டாடா படத்துக்குப் பிறகுதான் கவினை மீட் பண்ணி கதை சொன்னேன். இந்தக் கதையைக் கேட்டதும் அவர், ” இந்த கதைல நடந்த சம்பவமெல்லாம் என் வாழ்க்கையிலயும் நடந்திருக்குன்னு” சொன்னாரு. அதுக்கு பிறகுதான் இந்த திரைப்படம் சரியான நபர்கிட்ட போயிருக்குனு எனக்கு நம்பிக்கை வந்தது.” என்றார்.