எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா (Tesla) நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் இந்தியாவிலும் தனது எலெக்ட்ரிக் கார் ஆலையை அமைப்பதற்கு முயற்சித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு எதிராக டெஸ்லா வழக்கு தொடர்ந்துள்ளது.
டெஸ்லா பவர் (Tesla Power) என்ற இந்திய நிறுவனம் லெட் ஆசிட் பேட்டரிகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தி சர்வதேச தலைமையகம் அமெரிக்காவில் டெலாவரில் உள்ளது. இந்த நிலையில், டெஸ்லா பவர் நிறுவனத்துக்கு எதிராக எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் பெயர் மூலம் டெஸ்லா பவர் நிறுவனம் தனது பொருட்களை விளம்பரம் செய்வதற்கு முயற்சித்து வருவதாக நீதிமன்றத்தில் டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, டெஸ்லா பெயரை பயன்படுத்த தடை விதித்து டெஸ்லா பவர் நிறுவனத்துக்கு நிரந்தர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும், உரிய இழப்பீடு கோரியும் டெஸ்லா நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் 2022 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் தொடர்ந்து டெஸ்லா பெயரை டெஸ்லா பவர் நிறுவனம் பயன்படுத்தி வருவதாக் டெஸ்லா நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
எனினும், டெஸ்லா பவர் நிறுவனம் பேட்டரிகளை மட்டுமே உற்பத்தி செய்து வருவதாகவும், எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய எந்தத் திட்டமும் இல்லை எனவும் நீதிமன்றத்தில் டெஸ்லா பவர் நிறுவனம் பதில் அளித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், டெஸ்லா நிறுவனம் வருவதற்கு முன்பாகவே இந்தியாவில் அனைத்து அரசு அனுமதிகளையும் பெற்று இயங்கி வருவதாக டெஸ்லா பவர் நிறுவனம் வாதிட்டுள்ளது.
இந்த வழக்கில் உரிய ஆவணங்களுடன் பதில் மனுத் தாக்கல் செய்வதற்கு டெஸ்லா பவர் நிறுவனத்துக்கு மூன்று வாரங்கள் அவகாசம் அளித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 22-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.