மேட்டூர்: மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட ஒரு மணி நேர மின் தடையால், சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு செல்போன் டார்ச் வெளிச்சத்தில் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.
மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு, பொது மருத்துவம், எலும்பு முறிவு என 20-க்கும் மேற்பட்ட துறைகள் செயல்படுகிறது. இந்த மருத்துவமனையால் கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர். தினமும் 500க்கும் மேற்பட்டவர்கள் உள் மற்றும் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் உரிய நேரத்துக்கு சிகிச்சை பெற முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த கோபி (40). மகளிர் லோன் வசூல் செய்யும் பணி செய்து வருகிறார். இவர் இன்று (4-ம் தேதி) மாலை மேட்டூர் அனல்மின் நிலையம் எதிரேயுள்ள மதுபான கடையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர், கோபி அவரது நண்பரான செல்வம் என்பவருடன் மதுபோதையில் மேட்டூரில் இருந்து பூலாம்பட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மேட்டூர் அடுத்த செக்கானுர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (56) மற்றும் மனைவி வேளாங்கண்ணி (49) இருவரும் இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்தனர். வாட்சம்பள்ளி பகுதியில் 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதில் செல்வம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர், அங்கிருந்த மக்கள் 2 பேரையும் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, மேட்டுரில் பலத்த இடி மற்றும் காற்றுடன் மழை பெய்ததால், மின் தடை ஏற்பட்டு மருத்துவமனையிலும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியது.
இதனிடையே, மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டரும் வேலை செய்யாததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் உள் மற்றும் வெளி நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனிடையே, விபத்தில் காயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. மேலும், பணியில் மருத்துவரும் இல்லாததால், செவிலியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.
பின்னர், செவிலியர்கள் செல்போனில் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளித்தனர். இதனால் நோயாளிக்கு அளிக்க வேண்டிய முதலுதவி, மருத்துவ பரிசோதனைகள் எதுவும் செய்யப்படவில்லை. பின்னர், மின் விநியோகம் வந்த பிறகே மருத்துவர் சிகிச்சை அளிக்க வந்து முதலுதவி அளித்தார். இதையடுத்து, வேளாங்கண்ணி, கோபி ஆகிய 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் மின் விநியோகம் இல்லாத போது, ஜெனரேட்டரும் செயல்படாததால் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காததை கண்டித்து, உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து மேட்டூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் இளவரசி கூறுகையில், “அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயந்திரம் பழுதாகவில்லை. நல்ல முறையில் தான் செயல்பாட்டில் உள்ளது. ஜெனரேட்டரை இயக்கும் ஊழியரின் உறவினர் இரங்கல் நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். இதனால் தான் ஜெனரேட்டரை இயக்கவில்லை. வேறு ஏதுவும் கிடையாது, இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்படும்” என்றார்.