செய்தித் தெறிப்புகள் @ மே 4: நெல்லை காங். நிர்வாகி மர்ம மரணம், மோடிக்கு பிரியங்கா பதிலடி, சவுக்கு சங்கர் கைது!

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம்: நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம், “எனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருகின்றனர். அவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது” என நான்கு பக்கங்கள் கொண்ட புகார் அளித்திருக்கிறார்.

இந்நிலையில், கரைசுத்து புதூர் உவரியில் உள்ள தனக்குச் சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமாரில் உடல் சனிக்கிழமை மீட்கப்பட்டது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் நடந்துள்ள இச்சம்பவம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

நெல்லை காவல் துறை சொல்வது என்ன?: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கை – கால்கள் கட்டப்பட்டுள்ளதால் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு முழு விவரங்கள் வெளியே வரும் எனவும் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை இரங்கல்: “தமிழக காங்கிரஸ் தலைமை அறிவிக்கின்ற கட்சிப் பணிகளை எல்லாம் மிகுந்த பொறுப்புணர்வோடு நிறைவேற்றி இயக்கப் பணியாற்றி வந்த கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். மறைந்த கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்கின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் சு. திருநாவுக்கரசர் தனது இரங்கல் செய்தியில், “நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்ற நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார் எனும் செய்தி பேரிடியாக வந்துள்ளதை அறிந்து மனம் மிக வருந்துகிறேன். இவரது மறைவு குறித்து காவல்துறை புலனாய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்” – இபிஎஸ்: “நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் 2 நாட்களாக காணவில்லை என்று, அவரது மகன் புகார் அளித்திருந்த நிலையில், அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து வருவதை நான் தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறேன். தற்போது, ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதனிடையே “ஜெயக்குமார் தனசிங் படுகொலை வழக்கில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை தமிழகக் காவல் துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. அதனால் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வானிலை முன்னறிவிப்பு: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்றும், தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், மே 8-ம் தேதியன்று கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர் மாவட்டஙகள், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் பிரதமராக பாகிஸ்தான் விரும்புவது ஏன்? – மோடி: துல்லியத் தாக்குதல்களுக்கு அஞ்சியே பாகிஸ்தான் தலைவர்கள் ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என விரும்புகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை ‘இளவரசர்’ என்று குறிப்பிட்டு வரும் பிரதமர் மோடிக்கு பதிலடி தரும் வகையில், அவரை ‘பேரரசர்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். குஜராத்தில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், “காங்கிரஸ் எம்.பி ராகுல் நான்காயிரம் கிலோமீட்டர் தூரம் நடைப்பயணம் சென்று மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்வில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதை கேட்டறிந்தார்.

ஆனால், மறுபுறம் பிரதமர் நரேந்திர மோடி அரண்மனைகளில் வசிக்கிறார். அவரால் எப்படி சாமானியர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் கஷ்டத்தை புரிந்து கொள்ள முடியும்? எல்லாப் பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, எல்லாமே விலை உயர்ந்து விட்டது. இதெல்லாம் மோடிஜிக்கு புரியாது” என்று பிரியங்கா காந்தி சாடினார்.

பைடனின் ‘அந்நிய வெறுப்பு’ கருத்துக்கு இந்தியா பதில்: ‘இந்தியாவில் அந்நிய வெறுப்பு அதிகாமாகி விட்டது’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கருத்தை மறுத்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியச் சமூகம் எப்போதும் பிற சமூக மக்களுக்கு கதவைத் திறந்தே வைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேனியில் இருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனர். அவரை தேனியில் இருந்து கோவை அழைத்து வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் காவல் துறை வாகனம் மீது மற்றொரு வாகனம் மோதியதில் காவலர்களுக்கும், சவுக்கு சங்கருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

முன்னதாக, சவுக்கு சங்கர் கைது குறித்து போலீஸார் கூறும்போது, “தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டு சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தனர்.

ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கைது: கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் நிஜார் கொலை சம்பவம் தொடர்பாக மூன்று இந்தியர்களை கனடா போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். நிஜார் கொலையின் ‘ஹிட் ஸ்குவாட்’ என அறியப்படும் இவர்கள் மூவரும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்தவர்கள் என கனடா காவல் துறை தரப்பு தெரிவித்துள்ளது.

தேர்தலில் இருந்து புரி காங்கிரஸ் வேட்பாளர் விலகல்: பிரச்சார செலவுக்கு பணம் இல்லாததால் காங்கிரஸ் தனக்கு வழங்கிய சீட்டை கட்சியிடமே திருப்பி வழங்கியுள்ளார் ஒடிசா மாநிலம் புரி தொகுதி வேட்பாளர் சரிதா மொஹாந்தி. இந்தச் செய்தி காங்கிரஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேஷ்காலி விவகாரத்தில் மம்தா தாக்கு: “மேற்கு வங்க மாநிலத்தின் முற்போக்கு சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் மீதான வெறுப்பில், நமது மாநிலத்தை இழிவுபடுத்துவதற்காக பாஜக சதித் திட்டத்தை தீட்டியுள்ளது” என சந்தேஷ்காலி சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

ஹெச்.டி.ரேவண்ணா கைது: கர்நாடக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவுமான ஹெச்.டி. ரேவண்ணா கைது செய்யப்பட்டார். பெண்ணைக் கடத்தியதாக கே.ஆர் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனர்.

பாஜகவில் அர்விந்தர் லவ்லி ஐக்கியம்: சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகிய டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, முன்னாள் நகர நிர்வாக அமைச்சர் ராஜ் குமார் சவுகான் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் நீராஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் சனிக்கிழமை பாஜகவில் இணைந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.