பூஞ்ச்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்தியாவின் இரண்டு பாதுகாப்பு படைப் பிரிவு வாகனங்களை தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 5 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதில் ஒரு வாகனம் இந்திய விமானப்படைக்கு சொந்தமானது என்ற தகவல் கிடைத்துள்ளது.
வரும் 25-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சூழலில் அந்த தொகுதிக்கு உட்பட்ட பூஞ்ச் பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதியில் தீவிரவாதிகள் அதிகளவில் தாக்குதல் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பூஞ்ச் பகுதியின் ஷாஷிதர் எனும் இடத்தில் சனிக்கிழமை மாலை இரண்டு வாகனத்தின் மீது திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய பாதுகாப்புப் படைப் பிரிவை சேர்ந்த ஐந்து வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிரவாதிகளை தேடும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல். கடந்த ஆண்டு டிசம்பரில் தீவிரவாதிகள் புஃப்லியாஸில் நடத்திய தாக்குதலில் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் மூவர் காயமடைந்தனர்.
தற்போதைய தாக்குதலுக்கு அவர்களே காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து உள்ளதாகவும் களத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.