திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கை – கால்கள் கட்டப்பட்டுள்ளதால் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு முழு விவரங்கள் வெளியே வரும் எனவும் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
கொளுத்தும் வெயிலில் மறியல் – மக்கள் தவிப்பு: இதற்கிடையில், ‘ஜெயக்குமார் தனசிங் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டை காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் இன்று மதியம் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு திருநெல்வேலி மாநகர காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார்
கொளுத்தும் வெயிலில் சாலையில் சிறிது நேரம் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து பிளாஸ்டிக் சேர்களை எடுத்துக் கொண்டு வந்து சாலையில் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்னி நட்சத்திரம் வெயில் இன்று துவங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சியினர் இந்தப் போராட்டத்தினால் அந்தப் பகுதியில் சுமார் 30 நிமிடமாக நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்
இந்த வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்டிப்பாக இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர். இந்தப் போராட்டத்தினால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
4 பக்க புகார்.. – முன்னதாக, கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம், “எனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருகின்றனர். அவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது” என நான்கு பக்கங்கள் கொண்ட புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில், கரைசுத்து புதூர் உவரியில் (நாடார் உவரி) உள்ள தனக்குச் சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமாரில் உடல் இன்று (மே 4) மீட்கப்பட்டுள்ளது. > வாசிக்க: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை தீவிரம்