பஜாஜ் ஆட்டோவின் மிகப்பெரிய பல்சர் என அறிமுகம் செய்யப்பட்டுள்ள 373சிசி என்ஜின் பெற்றுள்ள NS400Z மாடலின் அனைத்து முக்கிய சிறப்பம்சங்கள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களின் ஆன்ரோடு விலை விபரத்தையும் அறிந்து கொள்ளலாம்.
சிறப்பு அறிமுக சலுகையாக பல்சர் என்எஸ் 400 இசட் அறிமுக சலுகை விலை ரூ.1.85 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டு, தற்பொழுது ரூ.5,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. விநியோகம் மே மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது.
Bajaj Pulsar NS400Z
சந்தையில் கிடைத்து வருகின்ற பல்சர் என்எஸ் பைக்குகளுக்கு உரித்தான நேக்டூ ஸ்போர்ட்டிவ் டிசைனை பகிர்ந்து கொண்டுள்ள பல்சர் NS400Z மாடலில் வழங்கப்பட்டுள்ள போல்ட் வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகளுக்கு மத்தியில் வட்ட வடிவ புராஜெக்டர் எல்இடி ஹெட்லைட் ஆனது விற்பனையில் உள்ள மற்ற பல்சர்களில் இல்லாத ஒன்றாக வித்தியாசமாகவும், ஆக்ரோஷமான தோற்றத்தையும் வெளிப்படுத்துகின்றது.
பெட்ரோல் டேங்க் எக்ஸ்டென்ஷன் பகுதி , ஸ்பிளிட் இருக்கை உட்பட பின்புறத்தில் உள்ள வழக்கமான இரு பிரிவுகளை பெற்ற எல்இடி டெயில் லைட் உள்ளிட்ட டிசைன் அம்சங்கள் என அனைத்தும் மற்ற என்எஸ் பைக்குகளை போலவே அமைந்திருக்கின்றது.
சிவப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் கிரே என நான்கு நிறங்களை பெற்று மிக நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் கோலன் நிற முன்பக்க யூஎஸ்டி ஃபோர்க் போன்றற்றுடன் என்ஜின் பெல்லி பேனில் 400 பேட்ஜ் உள்ளது.
பல்சர் NS400Z என்ஜின்
ஏற்கனவே சந்தையில் உள்ள டோமினார் 400 மற்றும் கேடிஎம் நிறுவன 390 அட்வென்ச்சர், முந்தைய 390 டியூக்கில் இடம்பெற்றிருந்த 373.27 cc ஒற்றை சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபடசமாக 39.4 bhp பவர் மற்றும் 35 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பல்சர் 400 பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உதவிகரமாக உள்ளது.
என்ஜின் தொடர்பில் மிக முக்கியமாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ரைட் பை வயர் டெக்னாலஜியை கொண்டு வந்திருப்பதுடன் அதிகபட்ச வேகம் மணிக்கு 154 கிமீ எட்டும் என உறுதிப்படுத்தியுள்ளது. இசியூ மூலம் ரைடிங் மோடுகளை Road, Rain, Sport, Off-Road தேர்வு செய்யலாம்.
பல்சர் என்எஸ்400 மெக்கானிக்கல் அம்சங்கள்
இந்த பைக் மாடலின் முன்புறத்தில் 43 மிமீ கோல்டன் நிறத்தை கொண்ட அப்சைட் டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் 6 ஸ்டெப்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோசாக் சஸ்பென்ஷன் கொண்டிருக்கின்றது.
பிரேக்கிங் அமைப்பில் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் ரைடிங் மோடுகளை பெற்று 320mm மற்றும் 230mm பின்புறத்தில் டிஸ்க் பிரேக் பெற்றதாக அமைந்துள்ளது. கூடுதலாக வாகனம் நிலை தடுமாறுவதனை தடுக்கும் டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளது.
முன்பக்கத்தில் 110/70-R17 மற்றும் பின்பக்கத்தில் 140/70-R17 டயரை பெற்று 168 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ், 1344 மிமீ வீல்பேஸ் உடன் 807 மிமீ இருக்கை உயரத்தை பெற்று 12 லிட்டர் கொள்ளளவு உள்ள எரிபொருள் தொட்டியுடன் பல்சர் என்எஸ்400 எடை 174 கிலோ கிராம் பெற்றுள்ளது.
NS400Z டிஜிட்டல் கிளஸ்ட்டர்
மொபைலை சார்ஜிங் செய்ய யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்டுடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியை வழங்குகின்ற எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டருக்கு பிரத்தியேக கட்டுப்பாடு சுவிட்சுகள் வழங்கப்பட்டு ரைட் கனெக்ட் செயலி மூலம் பல்வேறு வசதிகளை வழங்குகின்றது.
டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், இசைக் கட்டுப்பாடு, இசையை மாற்றும் வசதி, உள்வரும் அழைப்புகளை ஏற்கும் அல்லது நிராகரிக்கும் வசதி, லேப் டைமர், எஸ்எம்எஸ் அலர்ட் என பலவற்றை பெறுகின்றது.
மற்ற வசதிகளான ஃப்யூவல் கேஜ், டேக்கோமீட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் மற்றும் ட்ரிப் மீட்டர் ரீடிங்கும் உள்ளது.
Bajaj Pulsar NS400Z ஆன்ரோடு விலை மற்றும் போட்டியாளர்கள்
இந்திய சந்தையில் கிடைக்கின்ற 300-400சிசி பிரிவில் உள்ள ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பைக்குகளான அப்பாச்சி RTR 310R , ட்ரையம்ப் ஸ்பீடு 400, டோமினார் 400, பிஎம்டபிள்யூ G310 R , விலை உயர்ந்த கேடிஎம் டியூக் 390 உட்பட ரூ.1.70 முதல் ரூ.2.20 லட்சம் விலைக்குகள் உள்ள மற்ற போட்டியாளர்களுக்கு மிகவும் சவால் விடுக்கும் வகையில் குறைந்த விலையில் வந்துள்ளது.
2024 பஜாஜ் பல்சர் NS400 பைக்கின் தமிழ்நாடு ஆன் ரோடு விலை ரூ.2.29 லட்சத்தை எட்டுகின்றது. தற்பொழுது கிடைத்து வருகின்ற அறிமுக விலை குறைப்பு சலுகை சில வாரங்களுக்கு மட்டுமே கிடைக்கலாம்.