பிரேசிலில் வெளுத்து வாங்கும் கனமழை: உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்வு

சாவ் பாலோ,

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு 29 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 39 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 70 பேர் மாயமாகி உள்ளதாகவும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட போர்டோ அலெக்ரே நகரத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அர்ஜென்டினா மற்றும் உருகுவே நாட்டின் எல்லையில் அமைந்துள்ள பல நகரங்களுக்கு அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது

இதுதொடர்பாக அம்மாநில கவர்னர் எட்வர்டோ லைட் கூறுகையில், “இது கடினமான நாட்களாக இருக்கும். நாங்கள் மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம். உயிரைக் காப்பாற்றுவதே எங்கள் குறிக்கோள். சில சொத்துக்களை இழந்தாலும், நாம் உயிர்களை காப்பாற்ற வேண்டும். மக்களை மீட்பதே எங்கள் முன்னுரிமை. மீதமுள்ளவற்றைப் பொறுத்தவரை, நாங்கள் முன்னோக்கி செல்லும் வழியை கண்டுபிடிப்போம்” என்று அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.