இந்தியன் பிரீமியர் லீக் 2024 இல் (ஐபிஎல் 2024) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை (எல்எஸ்ஜி) 98 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டியது. ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி ஏற்கனவே 16 புள்ளிகளுடன் உள்ளது, ஆனால் ரன் ரேட் காரணமாக கொல்கத்தாவை விட பின்தங்கி உள்ளது. இருப்பினும், ராஜஸ்தான் அணியும், கொல்கத்தாவும் பிளே ஆஃப் சுற்றுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இப்போது மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளிடையே தான் அந்த கடும் போட்டி இருக்கிறது. இந்த மூன்று அணிகளும் தலா 12 புள்ளிகளுடன் உள்ளன. சென்னை மற்றும் லக்னோவை விட சன்ரைசர்ஸ் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது. இன்று மும்பை இந்தியன்ஸை (எம்ஐ), சன்ரைசர்ஸ் அணி எதிர்கொள்கிறது. இப்போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கான இடத்தை ஓரளவுக்கு உறுதி செய்துவிடலாம். ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது உள்ளது.
ஆர்சிபி அணிக்கான வாய்ப்பு
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் 11 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஐபிஎல் 2024ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் 8 போட்டிகளில் ஏழில் தோல்வியடைந்தது. இதன் பிறகு, தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று மீண்டும் அசத்தினர். இதனால் ஃபாஃப் டு பிளெசிஸி தலைமையிலான அந்த அணியும் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் இன்னும் போட்டியில் உள்ளது. அதற்கு, ஆர்சிபி அணி ஆனால் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அப்போது, 14 புள்ளிகள் கிடைத்து மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாகவும், ரன் ரேட் சிறப்பாகவும் இருக்கும்பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி முன்னேற வாய்ப்புள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இருக்கும் வாய்ப்பு
பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை அணியிடம் தோல்வியடைந்ததை அடுத்து அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நம்பிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகியிருக்கும். தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி எட்டு புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடத்தில் இருப்பதால், அந்த அணிகளுக்கான பிளே ஆப் வாய்ப்பு என்பது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அதேநேரத்தில் டைட்டன்ஸ் அணிக்கு இன்னும் மைரிழையில் ஒரு வாய்ப்பு உள்ளது. கடைசி மூன்று போட்டிகளிலும் குஜராத் அணி வெற்றி பெற்றால், 14 புள்ளிகளை எட்டும், அப்போது மற்ற அணிகளின் முடிவுகளின் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம், மும்பை இந்திய அணியும், மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக இருந்தால், அபூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.