வான்கடே,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (திங்கள்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த முறை தள்ளாட்டம் போடுகிறது. 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட மும்பை அணி இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற மனநிலையுடன் விளையாடும். முடிந்த அளவுக்கு புள்ளிப்பட்டியலில் ஒரு சில இடங்கள் முன்னேற முயற்சிக்கும். நட்சத்திர பட்டாளம் இருந்தும் அவர்களின் ஆட்டம் ஒருங்கிணைந்து ‘கிளிக்’ ஆகாததால் மோசமான நிலையில் தவிக்கிறது. கடைசி 4 ஆட்டங்களில் தோல்வி முகம் தான். குறிப்பாக முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சொந்த மண்ணில் 170 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் 145 ரன்னில் அடங்கிப்போனது.
அதே சமயம் 12 புள்ளிகளுடன் உள்ள (6 வெற்றி, 4 தோல்வி) முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கில் வெளுத்து வாங்குகிறது. 5 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. டிராவிஸ் ஹெட் (396 ரன்), அபிஷேக் ஷர்மா (315 ரன்), ஹென்ரிச் கிளாசென் (337 ரன்), நிதிஷ்குமார் ரெட்டி (6 இன்னிங்சில் 2 அரைசதத்துடன் 219 ரன்) சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் கம்மின்ஸ், புவனேஷ்வர்குமார், டி.நடராஜன் கைகொடுக்கிறார்கள். ஏற்கனவே இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 277 ரன்கள் சேர்த்து சாதனை படைத்துடன், 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. பிளே-ஆப் வாய்ப்பை மேலும் பிரகாசப்படுத்திக் கொள்ளும் உத்வேகத்துடன் ஐதராபாத் வீரர்கள் வரிந்து கட்டுவார்கள். அவர்களின் அதிரடி ஜாலத்துக்கு மும்பை முட்டுக்கட்டை போடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.