பாடலாசிரியர் சினேகனும் அவரது காதல் மனைவி நடிகை கன்னிகாவும் இணைந்து ‘ஸ்னேகம் ஹெர்பல்’ ஹேர் ஆயில் பிசினஸ்ஸை தொடங்கியிருப்பது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பாடலாசிரியர் சினேகனும் காதல் மனைவி கன்னிகாவும் தொடர்ந்து ரீல்ஸ், வீடியோக்கள் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்கள். அதில், கன்னிகாவின் கூந்தல் இவ்வளவு நீளமாக, அழகாக இருக்கிறதே என்ற ஆச்சர்ய கமென்ட்டுகள் பெண்கள் மத்தியிலிருந்து மட்டுமல்ல ஆண்கள் மத்தியிலிருந்தும் தொடர்ச்சியாகவே குவிந்து வந்தன. தனது கூந்தல் மட்டுமல்ல, பலரது கூந்தலின் நீளம், அழகுக்கு காரணம் தாங்கள் தொடங்கியிருக்கும் ‘ஸ்னேகம் ஹெர்ஸ் ஹேர் ஆயில்’தான் என்கிறார் கன்னிகா. புதிதாக ஹேர் ஆயில் பிசினஸை தொடங்கியுள்ள கன்னிகாவிடம் பேசினேன்.
“ஒரு வருடமாகவே ஹெர்பல் ஹேர் ஆயில் தயாரிக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்துக்கிட்டிருந்தோம். இந்த மே-1 உழைப்பாளர் தினத்தன்றுதான் தொடங்கினோம். என்னோட சொந்த ஊர் அருப்புக்கோட்டை. எங்கக் குடும்பமே பிசினஸ் குடும்பம். நானே, சின்ன வயசுல டெக்ஸ்டைல் பிசினஸ் எல்லாம் பண்ணியிருக்கேன். சும்மாவே இருக்கமாட்டேன். ஏதாவது கத்துக்கிட்டே இருப்பேன். சினிமாங்குறது நிலையான வருமானம் கிடையாதுங்கிறது எல்லோருக்குமே தெரியும். மாற்று வழியா ஒரு பிசினஸ் தொடங்கலாம்னு யோசிச்சப்போதான் இந்த ஹேர் ஆயில் பிசினஸ் தொங்குற ஐடியா வந்துச்சு. பார்க்குற எல்லாருமே என்னோட முடி இவ்ளோ நீளமா இருக்கேன்னு ஆச்சர்யமா கேட்பாங்க.
எனக்கு மட்டுமில்ல எங்கம்மா, தங்கச்சி எல்லோருக்குமே முடி நீளமாத்தான் இருக்கும். பாட்டி வீட்லயே ஹேர் ஆயில் ரெடி பண்ணி எங்களுக்குக் கொடுப்பாங்க. அதைத்தான், நாங்க பயன்படுத்துவோம். அதுதான், எங்க எல்லோருடைய முடி நீளம், ஆரோக்கியம் எல்லாத்துக்குமே காரணம். மூலிகை ஹேர் ஆயிலால முடி நிச்சயம் வளரும்னு சொல்லமுடியாது. ஆனா, நம்ம உடம்பை குளிச்சியாக்கி முடி வளர்றதுக்கு உதவும். பாட்டி நமக்கு பண்ணதை நாமலும் ஃபாலோ அப் பண்ணலாம்னு ஹேர் ஆயில் தயாரிப்பை ஆரம்பிச்சேன். நாம மூலிகைகள் கலந்து தயாரிக்கும்போது கெமிக்கல் ரியாக்ஷன்கள் ஏற்படும். அதனால, சித்த மருத்துவர்கிட்ட கன்சல்ட் பண்ணினோம்.
அதுக்கப்புறம், அரசுடைய லேப்க்கு எங்களுடைய ஆயில் மாதிரிகளை அனுப்பினோம். இதை பயன்படுத்தலாம்னு முதல் டெஸ்ட்லேயே ஓகே ஆகி ரிசல்ட் வந்துடுச்சு. எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். பிரபல ஸ்கின் கேர் நிறுவனங்கள் என் முடியைப் பார்த்துட்டு நீங்களே எங்க நிறுவனத்தோட ஹேர் ஆயிலுக்கு மாடலா நடிக்கிறீங்களான்னு கேட்டிருக்காங்க. மக்களுக்கு உண்மையா இருக்கணும்னு நினைப்பேன். அதனால, நான் ஒத்துக்கல.
என்னோட கணவர் சினேகன்தான் எனக்கு பெரிய சப்போர்ட். அவரோட ஊக்கம் இல்லைன்னா இதை நான் ஸ்டார்ட் பண்ணியிருக்கவே முடியாது. எல்லா வகையிலும் மிகச்சிறந்த கணவர் அவர். என்னோட பேரைத்தான் இந்த பிராண்டுக்கு வைக்கணும்னு தீவிரமா இருந்தார். செக் பண்ணி பார்த்தா அதே பேர்ல ஆல்ரெடி ஒரு ஹேர் ஆயில் இருக்கு. எனக்கு என் கணவரை ரொம்பப் பிடிக்கும். அதனால, அவரோட பேரையே வெச்சுட்டேன்” என்கிறவரிடம் “நயன்தாரா தொங்கிய ஸ்கின் கேர் பொருட்களின் விலையைவிட நீங்கள் விற்கும் ஆயிலின் விலை கூடுதலாக இருப்பதாக கமெனட்டுகள் வருகிறதே?” என்று கேட்டபோது,
“அதுக்கு மிக முக்கியமான காரணம் தரம்தான். ஹேர் ஆயில் கம்பெனிகள் எல்லாம் உலர்ந்த மூலிகைகளை கலப்பாங்க. அது விலை குறைவு, அதுல கிடைக்குற நன்மைகளும் குறைவுதான். ஆனா, நாங்க செம்பருத்தி, துளசி, சின்ன வெங்காயம், ரோஜான்னு எல்லாமே ஃப்ரெஷ்ஷா போட்டு காய்ச்சுறோம். ரொம்ப நேரம் எடுத்து காய்ச்சுறோம். ரொம்ப நேரம் காய்ச்சுறதால பாதிக்கு பாதிதான் எண்ணெய் கிடைக்கும். வெட்டி வேர் மட்டும்தான் இதுல உலர்ந்தது. மத்த எல்லாத்தையும் நானே ஃப்ரெஷ்ஷா நேர்ல போய் வாங்குறேன்.
அதுமட்டுமில்லாம, வாகை செக்கு மரத்திலிருந்துதான் ஆட்டுறோம். அதுதான், எண்ணெயிலுள்ள சத்துக்களை அழிக்காது. அதேமாதிரி, வாசனைக்காக எந்த கெமிக்கலும் கலக்குறதில்ல. இதோட ஸ்மல்லே ரொம்ப ராவ்வா இருக்கும். இதை தினமும் பயன்படுத்தணும்னு அவசியமில்ல. வாரத்துக்கு இரண்டு நாட்கள் தலையின் மயிர்க்கால்களில் மசாஜ் செய்வதுபோல் இரவு தடவி படுத்துவிட்டு காலை குளித்துவிட்டால் போதும். முடி கொட்டுவதும் நின்றுவிடும்.
தரம் மட்டுமில்லாம இவ்ளோ ரேட்டுக்கு கொடுக்க முக்கிய காரணம் 18 சதவிகித ஜி.எஸ்.டி. கட்டுறோம். எல்லாமே முறைப்படி தயாரிக்கிறோம். இதை தயாரிப்பதற்கென்றே பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான சம்பளம், மூலிகைகள் வாங்கும் செலவு, தயாரிப்பு செலவு என தரத்தோடு தயாரித்தால் விலையும் கொஞ்சம் கூடுதலாகத்தானே இருக்கும்.
இதுக்கே, 1299 ரூபாய்க்கு விற்கத்தான் ஆரம்பத்தில் ப்ளான் பண்ணினோம். ஆரம்பம் என்பதால் 989 ரூபாய்க்கு கொடுக்கிறோம். இதை, ஒரு தாய்ப்பால் மாதிரி ஃபீல் பண்ணி எமோஷனலா கொடுக்கிறோம். இதுக்கு முன்னாடி 30 பேருக்குச் சின்ன பசங்க ஆண்கள், பெண்கள்னு 90 நாட்கள் பரிசோதனைக்குப் பிறகுதான் இந்த ஆயிலை விற்பனைக்கே கொண்டுவந்தோம். இப்போ, நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. நிறைய பேரு ஆர்டர் பண்றாங்க. விலை அதிகமா இருக்குன்னு சில பேர் கமென்ட் பண்றாங்க. அது எனக்கு மனசு கஷ்டமா இருக்கு. அவங்க வாங்கி பயன்படுத்தின பிறகு அப்படியெல்லாம் கமென்ட் பண்ணமாட்டாங்கன்னு நம்பிக்கை இருக்கு” என்றவரிடம் “கமல் சார் என்ன சொன்னார்?” என்று கேட்டபோது,
”எங்க குடும்பத்தோட நல்லது, கெட்டது எல்லாத்துலயுமே கமல் சார் இருப்பாரு. அவரை வெச்சுத்தான் ஸ்டார்ட் பண்ணலாம்னு நினைச்சோம். அப்புறம் அவரை தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு விட்டுட்டோம்” என்கிறார் அவர்.