Cheap Plans Of Popular OTT Platforms: நவீன காலகட்டத்தில் வங்கியில் கணக்கு வைத்திருப்பது எந்தளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் என இருக்கின்ற அனைத்து ஓடிடியிலும் கணக்கு வைத்திருந்தால்தான் நீங்கள் அக்மார்க் நெட்டிசன் ஆவீர்கள்.
எப்படி திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் போது முதல் நாள் முதல் காட்சியே படத்தை பார்த்து கருத்து சொல்ல முனைப்பு காட்டுவோமோ, அதேபோல ஓடிடியில் படம் வருகிறது என்றால் இரவோடு இரவாக அதை பார்த்துவிட்டு கருத்து சொல்வதுதான் தற்போதைய இளைஞர்களின் டிரெண்ட். பார்க்கிறோமோ இல்லையோ அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதும், இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுவதும்தான் மிக மிக முக்கியம்.
அப்படி நீங்கள் ஓடிடியில் வரும் படங்களை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு சந்தா செலுத்தாவிட்டாலோ அல்லது உங்களின் சந்தா காலாவதியாகிவிட்டாலோ உங்களால் பிரத்யேகமாக வழங்கப்படும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை பார்க்க முடியாது. அந்த வகையில், முன்னணியில் ஓடிடியின் குறைந்தபட்ச சந்தா பிளான்களை இதில் காணலாம்.
நெட்பிளிக்ஸ்
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நீங்கள் குறைந்தபட்ச சந்தா திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால் 149 ரூபாய் பிளான்தான் சரியானது. நெட்பிளிக்ஸ் மொபைல் என்ற பிளான் உங்களின் மொபைலின் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் பல மொழிகளில் கிடைக்கும் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், வெப்சீரிஸ்கள் ஆகியவற்றை நீங்கள் பார்க்கலாம். உங்கள் நாட்டில் கிடைக்கும் அனைத்துவிதமான படங்களையும் இதில் பார்க்கலாம். இதன் வீடியோ குவாலிட்டி 480p தான். மேலும் இந்த பிளான் ஒரு மாத வேலிடிட்டியை கொண்டுள்ளது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட பல பிராந்திய மொழி திரைப்படங்களும், ஹாலிவுட் திரைப்படங்களும் இதில் உள்ளன. குறிப்பாக, மார்வெல் படங்கள், கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகள் ஆகியவையும் நேரலையில் ஒளிப்பரப்பாகும். ஹாட்ஸ்டார் ஓடிடியின் குறைந்தபட்ச சந்தா திட்டம் என்றால் 149 ரூபாய் பிளான்தான். இது மூன்று மாத வேலிடிட்டியை கொண்டது. மேலும் இதில் 720p வீடியோ குவாலிட்டியில் திரைப்படங்களை பார்க்கலாம். இருப்பினும், இதில் விளம்பரங்களை வாடிக்கையாளர்கள் பார்கக வேண்டிய சூழலி் இருக்கும். மேலும், ஒரே ஒரு சாதனத்தில் மட்டுமே நீங்கள் இந்த கணக்கை பயன்படுத்த முடியும்.
அமேசான் பிரைம்
இந்தியாவில் அமேசான் பிரைம் ஓடிடியின் குறைந்தபட்ச ஆண்டுச் சந்தா என்றால் அது 1499 ரூபாய் பிளான்தான். இதில் பிரைம் ரீடிங், பிரைம் வீடியோ, பிரைம் மியூசிக் ஆகிய பலன்களையும் பெறலாம். அமேசானில் வரும் பெரிய தள்ளுபடி விற்பனைக்கான அணுகலை பிரைம் வாடிக்கையாளர்கள் ஒரு நாளுக்கு முன்னரே பெறுவார்கள், இதுவும் கூடுதல் பலன்களாகும். இதில் அமேசான் லைட் பிளானும் உள்ளது, இதன் விலை ஆண்டுக்கு 799 ரூபாயாகும். இந்த லைட் பிளானில் அமேசான் வீடியோ சேவை மொபைலில் மட்டுமே கிடைக்கும். அதுவும் 720p வீடியோ குவாலிட்டியில்… அதேபோல், அமேசான் மியூஸிக், பிரைம் ரீடிங் ஆகிய சேவைகள் கிடைக்காது.