பனாமாவின் அதிபர் தேர்தலில் ஜோஸ் ரவுல் முலினோ வெற்றி பெற்றுள்ளார். அவர் முன்னாள் அதிபர் ரிக்கார்டோ மார்டினெல்லிக்கு மாற்றாக கடைசி நேரத்தில் ரியலைசிங் கோல்ஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
64 வயதான அவர் மொத்தமாக 34.35 சதவீத வாக்குகளை பெற்றார். தனது போட்டியாளரை காட்டிலும் 9 புள்ளிகள் முன்னிலை பெற்று வெற்றி வேட்பாளர் ஆனார். பண மோசடி விவகாரத்தில் 10 ஆண்டு காலம் ரிக்கார்டோ மார்டினெல்லி சிறை தண்டனை பெற்றார். அதன் காரணமாக தேர்தலில் அவரால் போட்டியிட முடியவில்லை. அவருக்கு மாற்றாக ஜோஸ் ரவுல் முலினோ போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“வெற்றிகரமாக பணி நிறைவடைந்தது. இந்த நாள் என் வாழ்நாளில் முக்கிய நாளாகும். தேசத்தை வழிநடத்தும் மிகப்பெரிய பொறுப்பை பனாமா மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர். முதலில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட மார்டினெல்லி என்னை அழைத்தார். அப்போது இது நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை” என வெற்றிக்கு பிறகு அவர் தெரிவித்தார்.
தேசத்தில் நிலவும் மந்தமான பொருளாதார நிலை, பனாமா கால்வாயில் போக்குவரத்தை முடக்கும் வறட்சி, மக்களின் சுரங்க எதிர்ப்பு போராட்டங்கள் போன்றவற்றை புதிய அதிபர் சமாளிக்க வேண்டியுள்ளது.