ஹைதராபாத்: மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும் என தெலங்கானாவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
தெலங்கானா மாநிலம், ஆதிலாபாத் மாவட்டம், நிர்மல் பகுதியில் காங்கிரஸ் சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது: ஏழைகளின் உரிமைகளை பறித்துக் கொண்டு, அவற்றை பணக்காரர்களுக்கு சாதகமாக மாற்றும் திறன் கொண்டவர்கள் பாஜகவினர். இந்த தேர்தல், அரசியல் சாசனத்தை காப்பாற்ற நினைக்கும் காங்கிரஸுக்கும், அரசியல் சாசனத்தை மாற்ற நினைக்கும் பாஜகவுக்கும் இடையே நடக்கும் போர் ஆகும். தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இதேபோன்று, மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்கள் முன்னேற நிதி உதவி செய்வோம். பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவோம். ஆதிவாசிகளின் நிலப் பிரச்சனை தீர்க்கப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். பொருளாதார ரீதியான சர்வே எடுக்கப்படும்.
பணக்காரர்களுக்காகவே மோடி அரசு வேலை செய்கிறது. மக்களிடையே பிரிவினைவாதத்தை பாஜக தூண்டுகிறது. மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் எஸ்.சி., எஸ்.டி., பி.சி. பிரிவினரின் உரிமைகள் காக்கப்படும.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உட்பட பல்வேறு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.