ஹலம்பவெவ விவசாயியின் நான்கு நாள் உண்ணாவிரதம் அமைச்சர் மனுஷவின் தலையீட்டினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது .
வெலிஓயா ஹலெம்பவெவ விவசாயிகள் அமைப்பின் தலைவர் தண்ணீர் பிரச்சினை காரணமாக முன்னெடுத்து வந்த நான்கு நாள் உண்ணாவிரதப் போராட்டம் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலையீட்டினால் முடிவுக்கு கொண்டுவர அவ் அமைப்பு கடந்த (04 ) அன்று இணக்கப்பாட்டிக்கு வந்தது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையில் கலந்து கொண்ட அமைச்சர் மனுஷ நாணயக்காரவை கடந்த (04) அன்று சந்தித்த ஹலெம்பவெவ விவசாயிகள் தங்களது தண்ணீர் பிரச்சினைக்கு இதுவரை எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.
அதன்பிரகாரம் அவ்விடத்திற்கு கள விஜயம் செய்த அமைச்சர் மனுஷ நாணயக்கார இவ்விடயம் தொடர்பில் வனஜீவராசிகள், வன பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
யான்ஓயாவில் இருந்து ஹலெம்பவெவ வரை நீர்ப்பாசன நீரை கொண்டு வரவதற்கு தேவையான 225 மில்லியன் ரூபாவை பரிசீலித்து வழங்குவதற்கும் இன்று (06) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கபப்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
அதன் பிரகாரம் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
அதன்படி உண்ணாவிரதத்தை முடிவுக்குகொண்டுவந்த விவசாயிகள் அமைப்பின் தலைவர் தமது பிரச்சினை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அமைச்சரிடம் கையளித்ததுடன், அவைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் கோரிக்கை விடுத்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதார நிலைமையை சீர்செய்துள்ளமையால் , இப்பிரச்சினைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அதிகம் வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் விவசாயிகளிடத்தில் தெரிவித்தார்
2013ஆம் ஆண்டு இலங்கை மகாவலி அதிகாரசபையால் ஹலம்பவெவ ஒரு விவசாயக் குடியேற்றமாக சுமார் முன்னூறு விவசாயக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டதுடன் தற்போது சுமார் இருநூறு குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றன.
யான் ஓயா கருத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நீர் பாசனம் வழங்கப்பட வேண்டிய நிலையில் பல்வேறு காரணங்களால் நீர் பாசனம் முறையாக வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால் சுமார் 200 விவசாய குடும்பங்களுக்கு நீர் பாசனம் கிடைக்காமல் பயிர்கள் விளைச்சல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் யான்ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து தமக்கான நீரைப் பெற்றுத்தருமாறு ஹலெம்பவெவ காலனி விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததுடன், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் தலைமையில் இது தொடர்பான மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
ஆனால் அநுராதபுரம் மாவட்டத்தில் இருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு நீர் கொண்டு செல்வது நாளுக்கு நாள் தாமதமாகி வருவதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில காலமாக விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த இப் பிரச்சினையில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.