ஈரோடு: கோடை வெப்பத்தை தணிப்பதற்காக காரில் ‘ஏசி’யை இயக்கி உறங்குவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் மின்சார விநியோகத்தில் ஏற்ற, இறக்கம் இருப்பதால் குளிர்சாதன இயந்திரங்கள் (ஏசி) தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மேலும், மின் தடை ஏற்படும் போதும் ஏசி இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இது போன்ற சூழலில், கார்களில் உள்ள ஏசி இயந்திரத்தை `ஆன்’ செய்து, காரில் உறங்குவதை சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
மேலும், வெளியிடங்களுக்கு காரில் செல்வோர், சாலையோரங்களில் காரை நிறுத்தி ஏசி இயக்கத்தில் காரில் உறங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு, காரில் ‘ஏசி’யை இயக்கி, இரவில் உறங்குவது ஆபத்தை விளைவிக்கும் என மோட்டார் வாகனத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஈரோட்டில் 2019-ல் காரை சாலையோரமாக நிறுத்தி, ‘ஏசி’யை இயக்கி உறங்கிய ஒருவர் மூச்சுத் திணறலால் உயிரிழந்த சம்பவத்தை அவர்கள் உதாரணமாகக் குறிப்பிடுகின்றனர்.
இது குறித்து தனியார் ஆட்டோமொபைல் நிறுவன நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கார் இன்ஜின் இயக்கத்தில் இருக்கும் போது வரும் புகையில் கார்பன் மோனாக்ஸைடு வெளியேறும். அவ்வாறு வெளியேறும் கார்பன் மோனாக்ஸைடு, காரின் அடிப்பகுதி வழியாக காருக்குள் நுழைய வாய்ப்புள்ளது.
காருக்குள் வரும் கார்பன் மோனாக்ஸைடை சுவாசித்தால், ரத்தத்தில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜன் குறைவாகக் கிடைத்து, மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அது உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்து விடும்.
காரில் ஏசியை இயக்கி உறங்குவதாக இருந்தால், வெளிக்காற்று சற்று உள்ளே வரும் வகையில் கண்ணாடியை இறக்கி வைக்க வேண்டும். வெளிக்காற்று உள்ளே வரும்போது, கார்பன் மோனாக்ஸைடு மூலம் ஏற்படும் நச்சுப் பாதிப்பு குறையும். மேலும், நிறுத்தப்பட்ட நிலையில் உள்ள காரில் ஏசியை பயன்படுத்தும்போது ‘ரீ சர்குலேஷன் மோடில்’ வைப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.