கர்நாடக மாநிலத்தின் 28 மக்களவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. 14 இடங்களுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 14 இடங்களுக்கு நாளை (மே 7) வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. தேசியக் கட்சிகள் தொடர்ந்து கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் நேற்று பிரசாரத்துக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தனர்.
அப்போது, மல்லிகார்ஜுன கார்கே,“எங்கள் பிரசாரத்தில் கெட்டது என எதுவுமில்லை. இந்த உழைப்பு அனைத்தும் நம் நாட்டிற்காகச் செய்கிறோம். நாட்டைக் கெடுப்பவரை, அழிவுக்குக் கொண்டுசெல்பவரைத் தடுக்க வேலை செய்யும் போது நன்றாக உணர்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாகக் குறைந்தபட்சம் நாட்டிற்காக ஏதாவது செய்கிறோம் என்ற நிம்மதி இருக்கிறது” எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பேசிய சித்தராமையா,“அதிகாரமா சித்தாந்தமா எதைத் தேர்ந்தெடுப்பது எனக் கேட்டால்…
சித்தாந்தம் எப்போதும் முக்கியம். கட்சியின் சித்தாந்தத்தையும் கட்சியின் திட்டங்களையும் மக்கள் முன் வைக்க வேண்டும். நீங்கள் ஆட்சியிலிருந்தால், சித்தாந்தத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அப்போதுதான் மக்கள் நம் நிலைப்பாட்டைப் பாராட்டுவார்கள், ஆசீர்வதிப்பார்கள். அதிகாரம் வரும் போகும். ஆனால் சித்தாந்தத்திற்கு உண்மையாக இருப்பது பெரிய விஷயம். இதற்காக நமது தலைவர்கள் நிறையத் தியாகங்களைச் செய்திருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி,“கார்கே ஜி, சித்தராமையா ஜி இருவரின் கருத்துடனும் நான் உடன்படுகிறேன். என் பார்வையில், சித்தாந்தத்தைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் நீங்கள் பெரிய அமைப்பாக உருவாக முடியாது. அதிகாரத்தை நோக்கிச் செல்ல முடியாது. மேலும், ஏழைகள், பெண்கள், பன்மைத்துவம், ஜனநாயகம், அனைவரையும் சமமாக நடத்துதல் போன்ற நமது சித்தாந்தத்தை நாம் மக்களுக்கு விளக்க வேண்டும். தேசியளவில் அரசியல் போராட்டம் எப்போதும் சித்தாந்தத்தைப் பற்றியது.
நான் வெள்ளை நிற சட்டை பயன்படுத்துவதற்கு வெளிப்படைத்தன்மையும், எளிமைதான் காரணம். மேலும் நான் ஆடைகளைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. நான் அதை எளிமையாக்க விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை, இந்த பிரசாரம் கிட்டத்தட்ட 70 நாட்களாக நடந்து வருகிறது. பாரத் ஜோடோ யாத்ரா ஒரு பிரசாரமல்ல.
ஆனால், இந்த பிரசாரத்தை விட உழைப்பின் அடிப்படையில் யாத்ரா கடினமாக இருந்தது. இடைவிடாது நீண்ட காலமாக நடந்தது, மக்களின் மனநிலையை அறிந்தது என நீண்ட பயணம் அது. அதன் மூலம் நாட்டிற்கு என்ன தேவை என்பதைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது” எனத் தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88