‘பிரேக்கிங் நியூஸ்… ‘பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024’ விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியது. இந்தத் திட்டம் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தனிநபர்களுக்கானது. சொந்தமாக லேப்டாப் வாங்க இயலாதவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. விரைந்து பதிவு செய்யுங்கள்… இங்கே (லிங்க்) பதிவு செய்து விண்ணப்பிக்கவும்” என சொந்தமாக மடிக்கணினி வாங்க இயலாதவர்களுக்கு, பிரதம மந்திரியின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கடந்த சில நாள்களாக வாட்ஸ்-அப்பில் செய்தி பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது.
இந்த செய்தியை படித்தவர், படிக்காதவர் என அனைவரும் அனைத்து குழுக்களிலும் பகிர்ந்து வருகின்றனர். இதன் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக, இதில் இணைக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து உள்ளே சென்றால், குறைந்த வருமானம் கொண்ட ஒவ்வொரு தனிநபருக்கும், அவர்களின் வாழ்க்கை அனுபவத்தை மேம்படுத்த இலவச மடிக்கணினி பெறும் வாய்ப்புள்ளது என்ற ஆசையைத் தூண்டும் பீடிகையுடன் தொடங்கி, முதல் கேள்வியாக உங்களுக்கு உண்மையில் ஒரு மடிக்கணினி தேவை எனக் குறிப்பிட்டு, கீழே சம்மந்தமே இல்லாமல் வயது வரம்பு (10 முதல் 70 ஆண்டுகள்) வரை என உள்ளது.
இரண்டாவது கேள்வியாக நீங்கள் படிக்கவும், எழுதவும் தெரி்ந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்து, தொடர்ச்சியாக பெயர், கல்வி நிலை, விரும்பும் லேப்டாப் பிராண்ட், வயது போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இறுதியாக அடுத்து என உள்ள பட்டனை அழுத்தினால், இதேபோல அடுத்தடுத்த பக்கங்களில் பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டு, தொடர்கதையாக உள்ளது. இதைப் பார்த்தாலே இது ஒரு போலியான செய்தி என்பது தெரிய வருகிறது. குறிப்பாக ஆண்களை விட பெண்களின் மொபைல் எண்களைக் குறி வைத்து இந்த போலி செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
பொதுவாக, 2000-ம் ஆண்டுகளில் செல்போன்கள் பொதுமக்களிடம் சகஜமாக புழக்கத்தில் வந்தபோதில் இருந்தே இதுபோன்ற போலியான தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் இந்த குறுஞ்செய்தியை பத்து பேருக்கு அனுப்பினால், அரை மணி நேரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரும், அதே நேரத்தில் இச்செய்தியை புறக்கணித்தால் ரத்தம் கக்கி சாவீர்கள் என மரண பீதியை கிளப்பும் செய்தியில் தொடங்கி, இந்த லிங்க்கை கிளிக் செய்தால் உடனே ரூ.500-க்கு உங்கள் செல்போன் ரீசார்ஜ் செய்யப்படும் என விதவிதமான போலியாக செய்திகள் பரப்பப்பட்டு வந்துள்ளன.
அதன் லேட்டஸ்ட் வெர்சன்தான் தற்போது பரப்பப்பட்டு வரும் PMYP பிரதம மந்திரியின் லேப்டாப் வழங்கும் திட்டம் 2024 என்பது தெரிய வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), கடந்த ஏப்ரல் 19-ம் தேதியே இது போலியான தகவல் என்றும், இதுபோல மத்திய அரசோ அல்லது தாங்களோ அறிவிப்பு வெளியிடவில்லை என்றும், இதுபோன்ற போலியான தகவல்களை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் புறக்கணித்து விடவேண்டும் என்றும், இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகங்களோ, விளக்கங்களோ தேவைப்பட்டால் www.aicte.india.org என்ற இணையதள பக்கத்திலோ அல்லது 011-29581000 மற்றும் 011-29581050 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற போலியான தகவல்களைப் பரப்புவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற செய்திகளை அனுப்பி, இதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் ஏதேனும் நிதி மோசடி போன்றவற்றை மேற்கொள்ள இயலுமா என தொழில்நுட்ப வல்லுநர் ஸ்ரீராமிடம் கேட்டபோது, “பொதுவாக இதுபோன்ற போலியான தகவல்களை பரப்புவது மூலம் நிதி மோசடி செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால், இதுபோன்ற செய்திகளை உண்மை என நம்பி, அந்த செய்தியில் தரப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, தங்களின் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்பவர்களிடமிருந்து, அந்த தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டு, அதன் மூலம் மோசடிகள் நடைபெறவும் வாய்ப்புள்ளது.
இதுபோன்ற செய்திகளை நமக்குத் தெரியாதவர்கள் அனுப்பும்போது, இச்செய்திகள் மேற்கொண்டு பரவுவதைத் தடுக்க நமது வாட்ஸ்-அப்பிலேயே REPORT செய்து விடலாம். ஆனால், இதை நமது நண்பர்களோ, உறவினர்களோ தெரியாமல், பார்வேர்ட் செய்யும்போது அவற்றைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து விடுவது நல்லது” என்றார்.