மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பீல்டிங்கை தேர்வு செய்ய சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் இறங்கியது. அந்த அணி தொடக்கத்தில் வழக்கம்போல் அதிரடியாக ஆடியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகியோரின் அதிரடியில் அந்த அணி 5வது ஓவரிலேயே 50 ரன்களைக் கடந்தது. இதனால், மும்பை அணி கொஞ்சம் கலங்கிய நிலையில், சூப்பரான கம்பேக்கை கொடுத்தனர். மும்பை பவுலர்கள் துல்லியமான லைனில் வீசி சன்ரசைர்ஸ் அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர்.
56 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த சன்ரைசர்ஸ் அணி, அடுத்த விக்கெட்டை 68க்கும், 90வது ரன்களில் 3வது விக்கெட்டையும் இழந்தனர். அதன்பிறகு வந்த வீரர்கள் கொஞ்சம் நிலைத்து நின்று விளையாடியிருந்தால் சன்ரைசர்ஸ் அணியின் ரன் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருந்திருக்கும். ஆனால் மிடில் ஆர்டர்கள் சோபிக்கவில்லை. கிளாசன், யான்சென், அப்துல் சமத் என வரிசையாக ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் சன்ரைசர்ஸ் அணியின் ரன்ரேட்டும் வெகுவாக குறைந்தது. முடிவில் 20 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா, சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்த சீசனின் மோசமான பார்ம்மை இஷான் கிஷன், ரோகித் சர்மா தொடர்ந்தனர். இஷான் 9 ரன்களுக்கும், ரோகித் சர்மா 4 ரன்களுக்கும், நமன் தீர் ரன் ஏதும் எடுக்காமலும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற மிடில் ஆர்டரில் சூர்யகுமார், திலக் வர்மா ஆகியோர் நங்கூரம்போல் நிலைத்து நின்று கொண்டனர். இருவரும் ஆரம்பத்தில் தடுமாறினாலும், அடுத்து அதிரடியாக ஆடி சன்ரைசர்ஸ் அணிக்கு தலைவலியாக மாறினர். இருப்பினும் கடைசி வரை சன்ரைசர்ஸ் அணியால் அவர்களின் விக்கெட்டை எடுக்கவே முடியவில்லை.
May 6, 2024
அபாரமான பேட்டிங்கை ஆடிய சூர்யகுமார் 51 பந்துகளில் 102 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்சர்களும், 12 பவுண்டரிகளும் அட்ங்கும். மறுமுனையில் சிறப்பாக ஆடிய திலக் வர்மா 32 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதேபோல் ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி 9வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி இருக்கிறது.