ஹாலிவுட்டிலிருந்து மற்றொரு சூப்பர்நேச்சுரல் ஹாரர் படைப்பாக திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது `டாரோ’ (Tarot).
ஹாலிவுட் இயக்குநர்கள் ஸ்பென்சர் கோஹெனும் அன்னா ஹால்பெர்க்கும் இணைந்து இந்தத் திகில் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். இயக்குநர் அன்னா ஹால்பெர்க் இயக்கும் முதல் திரைப்படம் இதுதான். 1992-ல் எழுத்தாளர் நிக்கோலஸ் ஆடம்ஸ் எழுதிய ‘ஹோரோஸ்கோப்’ என்ற நாவலைத் தழுவித்தான் இப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.
வருங்காலத்தில் நிகழக்கூடிய விஷயங்களைக் கணிப்பதற்காக இந்த டாரோ அட்டையை வெளிநாடுகளில் பயன்படுத்துவார்கள். சுருங்கச் சொன்னால், டாரோ அட்டையை வாசிப்பதும் ஒரு வகையான ஜாதகம் பார்ப்பது போலத்தான். இந்த அட்டையைக் குறிப்பாக ஐரோப்பியாவில் அதிகளவில் பயன்படுத்துவார்கள். அதை அடிப்படையாக வைத்தே இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
எலீஸின் (லார்சன் தாம்சன்) பிறந்தநாளைக் கொண்டாட நண்பர்கள் சிலர் ஒரு வீட்டிற்குச் செல்கிறார்கள். அங்குக் கிடைக்கும் டாரோ அட்டைகளை வாசிக்கத் தொடங்குகிறார்கள். மற்றவரின் டாரோ அட்டையை வாசிக்கக்கூடாது என்ற விஷயத்தைத் தெரிந்து கொண்டே அதைத் தொடரவும் செய்கிறார்கள்.
அந்த டாரோ அட்டைகள் அதற்கு முன்பே சபிக்கப்பட்டிருக்கின்றன. சபிக்கப்பட்ட டாரோ அட்டைகளைப் பயன்படுத்துவதினால் அந்த நண்பர்கள் குழு திகில் நிறைந்த சூழல்களில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த அமானுஷ்ய சூழலிலிருந்து எத்தனை நபர்கள் உயிருடன் தப்பினார்கள் என்பதுதான் இந்த ஹாரர் திரைப்படத்தின் கதை.
நண்பர்கள் குழுவிலிருக்கும் ஹாரியட் சிலேட்டர், லார்சென் தாம்சன், அடைன் ப்ராட்லி, நொவோகிராட்ஸ் ஆகிய நால்வரும் சூழலுக்கான பயத்தைக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதைத் தாண்டி ஜேக்கப் பாட்டலான் காமெடி வசனங்களில் வெளிப்படுத்த வேண்டிய பாவனைகளைச் சரியாகச் செய்து ரசிக்க வைக்கிறார். தமிழ் விளம்பரப் படங்களில் நடித்து பின்னர் வெப்சிரீஸ், படங்கள் என புரொமோஷன் வாங்கியிருக்கும் அவந்திகா வந்தனப்புவும் தன் நடிப்பால் கவனம் பெறுகிறார். திரையில் சிறிது நேரம் தோன்றினாலும் அடுத்தடுத்த காட்சிகளுக்கான பயத்தை முன்பே கடத்திவிடுகிறார் நடிகை ஆல்வென்.
ஹாரர் படங்களுக்கே உரித்தான அத்தனை வழக்கமான விஷயங்களையும் இதில் கோர்த்திருக்கிறார்கள். ‘அதே டெய்லர், அதே வாடகை’ என்ற பாணியில் அதே நண்பர்கள் குழு, அதே பழைய வீடு, அதே பிளாஷ்பேக், அதே அமானுஷ்யங்கள்தான் படத்தில் நிறைந்திருக்கின்றன. வழக்கமான விஷயங்களாக இருந்தாலும் படத்தை நகர்த்துவதற்கு டாரோ கார்டுகள் போல இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான விஷயங்களைச் சேர்த்திருக்கலாம்.
அனைத்து ஹாரர் படங்களிலும் டெம்ப்ளேட்டாக இடம்பெறும் ‘ஜம்ப் ஸ்கேர்’ (திடுக்கிடும்) காட்சிகள் இதிலும் நிறைந்திருக்கின்றன. அது ஒரு சில இடங்களில் மட்டுமே வேண்டிய திகில் உணர்வைக் கடத்துகிறது. எழுத்திலிருக்கும் சுவாரஸ்யமில்லாத தன்மையை மறைக்க, இந்தக் காட்சிகளைப் படம் நெடுக மலைச்சாரல் போலத் தூவியிருக்கிறார்கள். 1992-ல் எழுதப்பட்ட ஒரு நாவலைத் தழுவி படமாக எடுக்கும்போது சமகால படங்களையும் கவனித்து கொஞ்சமேனும் அப்டேட்டான விஷயங்களைச் சேர்த்திருக்கலாம்.
உயிருக்குப் பயந்து ஓடும் கதாபாத்திரங்களோடு சேர்ந்து ஓடி படம் பிடித்துக் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் எலி ஸ்மோல்கின். திடுக்கிடும் காட்சிகள் பார்வையாளர்களிடம் சரியாக கிளிக்காவது படத்தொகுப்பாளரின் கையில்தான் இருக்கிறது. அந்த வேலையைப் பாதிக்குப் பாதி திறம்படச் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் டாம் எல்கின்ஸ். திகில் கதைகளை விளக்கும் பிளாஷ்பேக் காட்சிகளின் பின்னணி இசை குட் வொர்க்!
எழுத்து ரீதியாகப் புலப்படும் குறைகளைத் தவிர்த்திருந்தால் இந்த `டாரோ’ படத்துக்கும் நல்லதொரு எதிர்காலம் அமைந்திருக்கும்.