சிம்லா: இமாச்சல பிரதேசத்திலுள்ள மண்டி தொகுதியிலிருந்து பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா போட்டியிடுகிறார். இமாச்சல பிரதேசத்திலிருந்து தேர்தலில் களம் இறங்கியுள்ள முதல் சினிமா நட்சத்திரம் இவரே. இதற்காக மண்டி தொகுதியில் அவர் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே மோடி அரசை ஆதரித்தும், இந்துத்துவா கொள்கைகளை தூக்கிப் பிடித்தும் கருத்து தெரிவித்து சர்ச்சைகள் ஏற்படுவது கங்கனாவுக்கு வழக்கமாக இருந்து வந்தது. பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னரும் அந்தப் போக்கு நீள்கிறது. தினந்தோறும் பரபரப்பான, சர்ச்சைக்குரிய கருத்துகளை தற்போதும் சொல்லி வந்தாலும் வேட்பாளரான பிறகு ஊடகங்களுக்கு அவர் நேரடி பேட்டிகள் அளிப்பதில்லை.
இந்நிலையில், மக்களவை தேர்தல் பிரச்சார காலகட்டத்தில் தினந்தோறும் காலை உள்ளூர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதை கங்கனா வழக்கமாக கொண்டிருப்பதாக பாஜக தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இதைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தின் வாக்காளர் எண்ணிக்கையில் பெண்கள் 49 சதவீதம் வகிப்பதால் பெண்களிடம் வாக்கு சேகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். உள்ளூர் மக்களின் வட்டாரவழக்கில் பேசுவது, பெண்களுடன் சேர்ந்து நடனமாடுவது, செல்பி புகைப்படங்கள் எடுப்பது, கோயில் வளாகங்களைச் சுத்தம் செய்வது போன்ற கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதையடுத்து, தன்னை எதிர்த்து மண்டி தொகுதியில் போட்டியிடும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும், இமாச்சல பிரதேச அமைச்சருமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விக்ரமாதித்ய சிங்கை தாக்கி பேசுவதை தனது வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் கங்கனா.
இமாச்சல பிரதேசத்தை ஆறு முறை ஆட்சி செய்த வீர்பத்ர சிங் மற்றும் இமாச்சல் காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங்கின் மகன் என்பதால் மண்டி தொகுதி விக்ரமாதித்யா சிங்கின் கோட்டை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், விக்ரமாதித்யாவைபோல் தான் வாரிசு அரசியல் செய்யவில்லை எனக் கூறி கங்கனா எதிர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதனால் கங்கனாவுக்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாக ஒருபுறம் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், கங்கனாவின் தனிப்பட்ட தாக்குதல், தரக்குறைவான விமர்சனம் செய்யும் பாணி மக்களிடம் எடுபடாது என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.