கோவை: காவல் துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை, கஞ்சா வழக்கிலும் தேனி காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர். இவர், தனது நேர்காணல் ஒன்றில், காவல்துறை உயரதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார்கள் எழுந்தன. அதனடிப்படையில், கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையின் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில், 4 பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து கடந்த 4-ம் தேதி கைது செய்தனர். அன்றைய தினம் காலை தேனியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவரை, கோவை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், அன்றைய தினம் விடுதியில் சவுக்கு சங்கருடன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ராஜரத்தினம் (42), ஓட்டுநர் சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராம்பிரபு(28) ஆகியாரும் தங்கியிருந்தனர். அவர்கள் இருவரையும் தேனி பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விசாரித்தனர். அவர்களது காரில் கஞ்சா இருந்ததை கண்டறிந்த காவல்துறையினர் அதை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ராஜரத்தினம், ராம்பிரபு ஆகியோரை கஞ்சா வழக்கில் பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது சவுக்கு சங்கர் மீதும் வழக்குப் பதியப்பட்டிருந்தது. இந்நிலையில், தேனி மாவட்டத்தின் மேற்கண்ட பழனிசெட்டிபட்டி காவல்நிலைய காவல்துறை அதிகாரிகள் இன்று (மே 7) கோவைக்கு வந்தனர். கோவை மத்திய சிறைக்குச் சென்று, அங்கு அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை, கஞ்சா வழக்கிலும் மீண்டும் கைது செய்தனர்.
இதனிடையே, காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் பெண் போலீஸ் அளித்த புகாரின் அடிப்படையில், சேலம் சைபர் கிரைம் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின்படி, ஐந்து பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.