நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் கடல் சீற்றத்தில் சிக்கி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அவர்களது பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அடுத்த கணபதிபுரம் பகுதியில் ஆயிரங்கால் பொழிமுகம் என்ற லெமூர் கடற்கரை பகுதி உள்ளது. திருச்சியில் தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு முடித்து, பயிற்சி மருத்துவர்களாக இருக்கும் 12 பேர் நேற்று முன்தினம் நாகர்கோவில் வந்தனர். அவர்களுடன் பயின்ற நாகர்கோவிலை சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றனர். பின்னர் காலை 11 மணி அளவில் லெமூர் கடற்கரை பகுதிக்கு 8 பயிற்சி மருத்துவர்கள் சென்றனர். கடற்கரையில் நின்றிருந்தபோது, கடல் சீற்றத்தால் வேகமாக எழுந்தபெரிய அலையில் அவர்கள் சிக்கினர்.
இதில், பயிற்சி மருத்துவர்களான தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த சார்கவி (24), நெய்வேலியை சேர்ந்த காயத்ரி (25), சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் (25), ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரவின்ஷாம் (23), கன்னியாகுமரி மாவட்டம் பறக்கையை சேர்ந்த சார்வதர்ஷித் (24) ஆகிய 5 பேரையும் கடல் அலைஇழுத்துச் சென்றது. சற்று நேரத்தில் 5 பேரும் மயங்கிய நிலையில் கடற்கரையில் ஒதுங்கினர். அங்கிருந்த மீனவர்கள், பொதுமக்கள் அவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், 5 பேரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே, நண்பர்கள் அலையில் சிக்கி இழுத்து செல்லப்படுவதை பார்த்த பயிற்சி மருத்துவர்கள் 3 பேர் அதிர்ச்சியில் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் மாலை கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கோடிமுனை கடற்கரையில் குளித்த சென்னையை சேர்ந்த மனோஜ்குமார், விசூஸ் ஆகியோர் அலையில் சிக்கி உயிரிழந்தனர். தேங்காய்பட்டினம் துறைமுகம் அருகே ஆதிஷா என்ற 7 வயதுசிறுமி கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில், பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் நேற்று கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தெற்கு கடல் பகுதியில் கடல் சீற்றம் மற்றும் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய பெருங்கடல் சேவை மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஆட்சியர் ஸ்ரீதர் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், குமரி தவிர மற்ற கடற்கரை பகுதிகளில் போதிய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படவில்லை. தற்போது பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு பிறகு, லெமூர் கடற்கரை நுழைவுவாயில் அடைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: லெமூர் கடற்கரையில் கால் நனைப்பதற்காக இறங்கிய திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்து சென்றுள்ளது. இதில் 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மருத்துவ சேவையில் ஈடுபட இருந்த மாணவர்களின் உயிரிழப்பு மருத்துவ உலகுக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பு.
பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.