உதகை: கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்ததால், அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது குடும்பத்தினருடன் 5 நாள் தங்கி ஓய்வெடுப்பதற்காக உதகை வந்துள்ளார்.
இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் முதல் கட்டமாக தேர்தல் முடிந்தது. இதேபோல் அண்டை மாநிலமான கர்நாடகாவின் முதல் கட்ட தேர்தல் கடந்த 26-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் இன்றுடன் முடிந்தது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா தேர்தல் பரப்புரை முடிந்து 5 நாள் ஓய்வெடுக்க குளிர் பிரதேசமான நீலகிரி மாவட்டம் உதகைக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் வந்து உள்ளார்.
இதையொட்டி இன்று மதியம்1.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் கிளம்பிய கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது குடும்பத்தினருடன் உதகை தீட்டுக்கல் மைதானம் வந்து இறங்கினார். அப்போது அவருடன் கர்நாடகா மின்சார துறை அமைச்சர் ஜார்ஜ், சமூக நலத்துறை அமைச்சர் மாதேவப்பா, எம்.எல்.சி. கோவிந்தராஜ் ஆகியோர் இருந்தனர்.இதை தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் கிளம்பி உதகை வென்லாக் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பங்களாவுக்கு சென்றார்.
வரும் 11ம் தேதி, வரை 5 நாட்கள் இங்கு தங்கி ஓய்வெடுக்கிறார். மேலும் ஒரு சில தனியார் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக முதல்வர் வருகையையொட்டி கர்நாடகா மற்றும் நீலகிரி போலீஸார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.