Doctor Vikatan: வீஸிங் பிரச்னை உள்ளவர்கள் சம்மரில் பழைய சாதம் சாப்பிடலாமா?

Doctor Vikatan: வீஸிங் பிரச்னை. ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்கள், கோடைக்காலத்தில் பாதாம் பிசின், இளநீர், வெந்தயம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாமா? கோடையின் வெப்பத்திலிருந்து தப்பிக்க பழைய சோறு சாப்பிடலாமா?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

கட்டுரையாளர்: சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

வீஸிங் (wheezing) பிரச்னை உள்ளவர்களை இரண்டாகப் பிரிக்கலாம். சிலருக்கு குளிர்காலத்தில் வீஸிங் பிரச்னை வரும். அவர்கள் கோடைகாலத்தில் நார்மலாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பழையசோறு, பாதாம் பிசின், இளநீர், வெந்தயம் என எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.

இன்னும் சிலருக்கு சம்மரிலும் இத்தகைய குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொண்டால் ஆஸ்துமா மற்றும் வீஸிங் பிரச்னைகள் வரலாம். அப்படிப்பட்டவர்கள் இந்த உணவுகளைத் தவிர்ப்பதே சிறந்தது. பாதாம் பிசின், வெந்தயம், இளநீர் என இவை எல்லாமே உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியவைதானே தவிர, வீஸிங் பிரச்னையைத் தூண்டக்கூடியவை அல்ல. எனவே. இந்த உணவுகளை மிதமாக எடுத்துப் பார்க்கலாம். அப்படி எடுக்கும்போது வீஸிங் அறிகுறிகள் ஏற்படுவதாக உணர்ந்தால் உடனடியாக நிறுத்திவிடலாம்.

ஆஸ்துமா… வீஸிங்…

உடல் குளிர்ச்சியடைய வேண்டும் என்றால் வெந்தயத்தை முதல்நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் எடுத்துக்கொள்ளலாம். வெந்தயம் சாப்பிட்டாலே சளி பிடிக்கிறது, வீஸிங் வருகிற மாதிரி தெரிகிறது என்பவர்கள், ஊறவைத்த வெந்தயத்துக்கு பதில், முளைகட்டிய வெந்தயம் சாப்பிடலாம். இது குளிர்ச்சியை சற்று மட்டுப்படுத்திக் கொடுக்கும். அதேசமயம், வெந்தயத்தின் அத்தனை நல்ல பலன்களையும் உடலுக்குக் கொடுக்கும்.

இளநீரையும் சிறிது சிறிதாகக் குடித்துப் பார்க்கலாம். முதல் நாள் சிறிது குடித்து எந்தப் பிரச்னையும் இல்லை என்றால் அடுத்தடுத்த நாள்களும் குடிக்கலாம். பாதாம் பிசின் என்பது அளவோடு எடுக்கக்கூடியதுதான் என்பதால் அதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. பழைய சாதத்தை காலையில் சாப்பிடுவது மிகுந்த ஊட்டமளிக்கக்கூடியதாக அமையும். அதனால் வீஸிங் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல வெயில் நாள்களிலும் வீஸிங் வரும் என்பவர்கள் இவற்றைத் தவிர்த்து விடலாம்.

இளநீர்

வீஸிங் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்தக் காரணத்தால்தான் அது வரும் என்று சொல்ல முடியாது. அலர்ஜியை ஏற்படுத்தும் விஷயங்கள் நபருக்கு நபர் மாறும். சிலருக்கு உணவின் மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு வீஸிங் வரலாம். வேறு சிலருக்கு தூசு அலர்ஜியால் வீஸிங் வரலாம். எனவே, எந்தக் காரணத்தால் வீஸிங் பாதிப்பு வருகிறது என்று உணர்ந்து, அதைத் தவிர்த்தாலே போதுமானது. மற்றபடி, நீங்கள் கேட்டிருக்கும் உணவுகளை கோடையில் எடுப்பதில் எந்தப் பிரச்னையும் வர வாய்ப்பில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.