நியூயார்க்: ஃபேஷன் ஆர்வலர்கள் சங்கமிக்கும் நிகழ்வாக அமைகிறது மெட் காலா. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம். இந்த நிகழ்வுக்கு அவர்கள் அணிந்து வரும் ஆடை தான் பேசுபொருளாக அமையும்.
கடந்த 1948-ல் மெட் காலா தொடங்கப்பட்டது. அது முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் திங்கள்கிழமையின் இரவில் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் நடிகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஃபேஷன் ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்பார்கள். அவர்கள் அணிந்து வரும் புதுமையான ஆடைகள் பலரையும் ஈர்க்கும். நிதி திரட்டும் முயற்சியாக இது தொடங்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு கருப்பொருளை மெட் காலா ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிடுவார்கள். அதன் அடிப்படையில் இதில் பங்கேற்கும் பிரபலங்கள் ஆடை அணிந்து வருவார்கள். அதனை ஃபேஷன் டிசைனர்கள் பிரத்யேகமாக வடிவமைப்பது வழக்கம்.
நடப்பு ஆண்டுக்கான மெட் காலா ‘The Garden of Time’ எனும் தீமின் கீழ் நடைபெறுகிறது. அதற்கு ஏற்றபடி சிவப்பு கம்பளத்தை (ரெட் கார்ப்பட்) வசீகரிக்கும் வகையில் பசுமை நிறைந்த தோட்டம் போல மாற்றப்பட்டுள்ளது. 50 டாலர்கள் என்ற அடிப்படையில் தொடங்கப்பட்ட டிக்கெட்டுகளின் விலை தற்போது 75,000 டாலர்களை நெருங்கி உள்ளது.
நடப்பு ஆண்டிலும் பல்வேறு துறை பிரபலங்கள் மெட் காலா நிகழ்வில் பங்கேற்றனர். அவர்கள் அணிந்து வந்த ஆடை அழகான வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் லூயிஸ் ஹாமில்டன், கொலம்பிய நாட்டு பாடகி ஷகிரா, பாடகர் எட் ஷீரன், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், அமெரிக்காவின் பிரபல மாடல் அழகியான கைலி ஜென்னர், அண்மையில் ஆஸ்கர் விருது வென்ற டேவின் ஜாய் ரேண்டால்ஃப், நடிகை ஜெனிஃபர் லோபஸ், இந்திய நடிகை ஆலியா பாட் என பல பிரபலங்கள் இதில் பங்கேற்றனர்.