தமிழகம் முழுவதும் சமூகத்தில் புது நம்பிக்கையைப் புகுத்துபவர்களுக்கு ஆண்டுதோறும் நம்பிக்கை விருதினை வழங்கி வருகிறது ஆனந்த விகடன்.
இந்த வருடம், இந்த விருது விழா மார்ச் 29-ம் தேதி அன்று சென்னை கலைவாணர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் டாப்-10 மனிதர்கள், டாப்-10 இளைஞர்கள், பெருந்தமிழர் எனச் சாதனையாளர்களுக்கு மகுடம் சூட்டப்பட்டது. அந்த வகையில் இந்த விருது விழாவில் ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் சண்டைப் பயிற்சியாளர்களாக அறிமுகமாகி பின்னர் ‘கே.ஜி.எஃப்’ படத்திற்காகத் தேசிய விருது பெற்று அனைவரையும் ஈர்த்த அன்பறிவ் சகோதரர்களுக்கு டாப்-10 இளைஞர்களுக்கான விருது வழங்கப்பட்டது.
இவ்விருதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கி சிறப்புச் செய்தார். அப்போது அன்பறிவ் சகோதரர்கள் பற்றிப் பேசிய லோகேஷ் கனகராஜ், “எனக்கு இந்த விருதை வழங்குறதுல ரொம்பவே பெருமையா இருக்கு. ஏன்னா, ஸ்டன்ட் மாஸ்டர் என்பதைத் தாண்டி இவங்க இரண்டு பேரும் என்னுடைய அண்ணன்கள் மாதிரி.
‘மெட்ராஸ்’ படத்துல முதல் முறையாகச் சண்டைப் பயிற்சியாளர்களாக அறிமுகமாகியிருந்தாங்க. அப்போதுதான் என்னுடைய முதல் படமான மாநகரத்தை எடுத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய இரண்டாவது படம் ‘கைதி’. அதுல அன்பறிவ்தான் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ். அது அவங்களோட 100வது படமும் கூட. மூன்று வருடத்தில் 100 படத்துக்கும் அவங்க செஞ்ச உழைப்பை பார்த்துக்கிட்டேதான் இருந்தேன். முதல் முதலாக என்னை நம்பி ஒரு புரொடியுசர் கிட்ட பேசி இந்த பையன் கிட்ட நிறைய கதை இருக்கு. அவன் கிட்ட கதை கேளுங்க. நாளைக்கு அவன் பெரிய ஆளா வந்துருவானு சொல்லி ஆரம்பிச்சு விட்டது இவங்கதான்…” என்று மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துகொண்டார்.
இயக்குநர் லோகேஷ் பேசியதை முழுமையாகக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.