அனைத்து அரசு பள்ளிகளிலும் மே இறுதிக்குள் இணைய வசதி: பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மே மாத இறுதிக்குள் இணையதள வசதி ஏற்படுத்த பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில், எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில்,தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மிக முக்கியமானது.

இதை கருத்தில் கொண்டு, முதல்வரின் சீரிய முயற்சியால் அரசு தற்போது தொழில்நுட்ப விரிவாக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

46.13 லட்சம் மாணவர்கள் பயன்: அந்த வகையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்க 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.519.73 கோடி மதிப்பீட்டிலும், 22,931 திறன்மிகு வகுப்பறைகள் ரூ.455.32 கோடி மதிப்பீட்டிலும் 46.13 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் உள்ள 6,023 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் 5 மற்றும் 6 Mbps இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

தற்போதைய நிலையில் மாணவர்களின் கற்றல் கற்பித்தலை எளிமையாக்கும் வகையில் பாடப் பொருட்கள் அனைத்தும் காணொலி வாயிலாக எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல்கள், மொழி ஆய்வகசெயல்பாடுகள், மனவெழுச்சி நலன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் மாணவர் களுக்கான மதிப்பீடுகள் போன்றவை உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகள் மூலம் வழங்கப்பட உள்ளன.

இப்பணிகளுக்கு, பள்ளிகளில் ஏற்கெனவே இருந்த இணைய வேகம் போதுமானதாக இல்லை என்பதால் அதை 100 Mbps என்ற அளவில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிஎஸ்என்எல் உடன் இணைந்து..: இதன்மூலம் 46 லட்சம் மாணவர்கள் கடினமான பாடப் பொருட்களை எளிமையாக காணொலி வாயிலாக கற்பது, உயர்கல்வி வழிகாட்டுதல் பெறுவது ஆகியவற்றுக்கு வழி ஏற்படும். இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் தமிழக அரசு இணைந்து செயல்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 6,223 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இதுவரை 5,907 பள்ளிகளிலும், 6,992 நடுநிலைப் பள்ளிகளில் 3,267 பள்ளிகளிலும் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 24,338 தொடக்கப் பள்ளிகளில் 8,711-ல் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளி களுக்கு 100 Mbps என்ற அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. எஞ்சிய 19,668 அரசுப் பள்ளிகளில் மே மாத இறுதிக்குள் நிறைவடையும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.