சென்னை: தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நீலகிரி மக்களவை தொகுதியில் உள்ள உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தன. அதேபோல, ஈரோடு மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களும் சிறிது நேரத்துக்கு செயலிழந்தன.கோடை வெப்பம் காரணமாக கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்ததாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
கண்காணிப்பு கேமராக்கள் அதிக வெப்பத்தை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், இதுகுறித்து உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,தேர்தல் ஆணையம் தரப்பில், “கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது குறித்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. கூடுதல் கேமராக்களை நிறுவவும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளவும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேர்தலில் போட்டியிட்டவர்கள் யாரும் வழக்கு தொடராத நிலையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி, வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.