உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறும் அஸ்ட்ராஜெனகா

வாஷிங்டன்,

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 68 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரசை தடுக்க பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளை உருவாக்கின. அவற்றில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி நல்ல பலன் தந்தது. அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கிய இந்த தடுப்பூசி உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது. இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் இந்த தடுப்பூசி விநியோகிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இதனிடையே, கொரோனா தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகின.

அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி உயிரிழப்பு மற்றும் பலருக்கு காயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதற்காக அந்நிறுவனம் 100 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு தரக்கோரியும் இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் சிலருக்கு அரிதினும் அரிதாக ரத்த உறைதல், ரத்த தட்டுகள் குறைவு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்துவிட்டதாலும், சந்தையில் தேவைக்கு அதிகமாகவே பல்வேறு கொரோனா தடுப்பூசி உள்ளதாலும் எங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறுவதாக அஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது.

தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் என அஸ்ட்ராஜெனகா இங்கிலாந்து கோர்ட்டில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசியை திரும்பபெற்றுள்ளது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.