சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைபாஸ் சாலையில் காரில் ஒரு காதல் ஜோடி வந்திறங்கியது. இந்த ஜோடி, அந்தப் பகுதியில் உள்ள கூல்ட்ரிங்க்ஸ் கடையில் குளிர்பானத்தைப் பருகியபடி சிரித்து பேசிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட டூவீலரில் ஒருவர் பந்தாவாக வந்திறங்கினார். அவர் அந்தக் காதல் ஜோடியிடம் சென்று, தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு, `நீங்கள் இருவரும் யார்… எதற்காக இங்கு நீண்ட நேரமாக நிற்கிறீர்கள்?’ என விசாரித்திருக்கிறார். அதற்கு அந்த காதல் ஜோடி, `நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறோம். கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில், இங்கே நின்று பேசிக் கொண்டிருக்கிறோம்’ என்று பதிலளித்தனர்.
இதையடுத்து காதல் ஜோடியிடம் `உங்கள் மீது எனக்கு சந்தேகமாக உள்ளது. நீங்கள் இருவரும் ஸ்டேஷனுக்கு வாருங்கள், உங்களை விசாரிக்க வேண்டும்’ என்று போலீஸ் தோரணையில் கூறியிருக்கிறார் அந்த மஃப்டி போலீஸ். அதனால் காதல் ஜோடி, `சார் எங்களின் காதல் விவகாரம் வீட்டுக்குத் தெரியாது. ப்ளீஸ்…’ என்று கெஞ்சத் தொடங்கியிருக்கிறது. அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மஃப்டி போலீஸ், `அப்படியென்றால் தங்க நகைகளைக் கழற்றிக் கொடு’ என்று கூறியிருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண்ணும் தங்க நகைகளைக் கழற்றிக் கொடுத்திருக்கிறார். அதை வாங்கிக் கொண்ட மஃப்டி போலீஸ், `அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்து இந்த நகைகளை வாங்கிக் கொள்’ என்று கூறிவிட்டு, பைக்கில் வேகமாகச் சென்றுவிட்டார். இதையடுத்து அந்தக் காதல் ஜோடி தங்க நகைகளை வாங்க அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் காவல் நிலையத்திலிருந்த போலீஸாரிடம் விவரத்தைக் கூறி தங்க நகைகளைக் கேட்டனர். அப்போதுதான் காதல் ஜோடியிடம் தங்க நகைகளை வாங்கியது போலி போலீஸ் எனத் தெரியவந்தது. இதையடுத்து காதல் ஜோடி தரப்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதனடிப்படையில் போலீஸார், சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலி போலீஸை தேடிவருகிறார்கள்.