கீவ்,
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் 2 ஆண்டுகளுக்கு முன் ரஷியா படையெடுத்தது. உக்ரைனின் கீவ், கார்கிவ், ஒடிசா, மரியுபோல் மற்றும் டோனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை போர் தொடக்கத்தில் ரஷியா கைப்பற்றியது. ஆனால் அந்நகரங்களை உக்ரைன் மீண்டும் தன்வசப்படுத்தி கொண்டது.
இந்நிலையில், சி.என்.என். செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விசயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.
உக்ரைன் அரசின் பாதுகாப்பு பிரிவில் அங்கம் வகிக்கும் கர்னல்கள் 2 பேர் பணம் பெற்று கொண்டு அதற்கு பதிலாக, உக்ரைனுக்கு எதிரான ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். இருவரில் ஒருவர் பயங்கரவாத செயலுக்கு தயாரான குற்றச்சாட்டும் உள்ளது. இருவர் மீதும் தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.
இவர்களில் ஒருவர் ரஷிய பாதுகாப்பு பிரிவிடம் இருந்து 2 ஆளில்லா விமானங்களையும் மற்றும் வெடிபொருட்களையும் பெற்றுள்ளார். அவற்றை மற்றொரு கூட்டாளிக்கு கொடுத்து, குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என உக்ரைனின் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
ஜெலன்ஸ்கி மற்றும் பிற மூத்த அதிகாரிகளை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்ட நிலையில், அதனை முறியடித்து விட்டோம் என்று உக்ரைனின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், உக்ரைனின் தென்பகுதியான மிகோலைவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், ஜெலன்ஸ்கியுடன் தொடர்புடைய உளவு தகவல்களை ரஷியாவுக்கு அனுப்ப முயன்றபோது, கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரலில் போலந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் ஜெலன்ஸ்கியை கொலை செய்வதற்கான சதி திட்டத்திற்கு உதவியது தெரிய வந்தது.
இவை தவிர, ரஷிய குண்டுவெடிப்பு தாக்குதலின்போது, பல முறை சிக்க கூடிய அனுபவங்களை ஜெலன்ஸ்கி எதிர்கொண்டிருக்கிறார்.