ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடாவின் ‘தோல் நிறம்’ குறித்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கியுள்ள பிரதமர் மோடி, ‘நிற வெறி குறித்த அவமானத்தை நாட்டு மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சாம் பிட்ரோடா அளித்த பேட்டி ஒன்றில், “அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்த சண்டைகளைத் தவிர்த்து நாங்கள் அனைவரும் 75 ஆண்டு காலம் மகிழ்ச்சியான சூழ்நிலையில் வாழ்ந்திருக்கிறோம். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டை எங்களால் ஒற்றுமையாக வைத்திருக்க முடியும். கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களைப் போல தோற்றமளிக்கலாம், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடகில் உள்ள மக்கள் ஒருவேளை வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் தோற்றமளிக்கலாம். அது ஒரு பெரிய விஷயம் இல்லை. நாங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள். வெவ்வேறு மொழிகள், மதங்கள், உடைகள், வெவ்வேறு உணவு பழக்கவழக்கங்களை நாங்கள் மதிக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார். பிட்ரோடாவின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.
இது குறித்து காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை சாடியுள்ள பிரதமர் மோடி, “குடியரசுத் தலைவர் தேர்தலின்போது தற்போதைய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் கருப்பு நிறம் காரணமாகவே அவரை காங்கிரஸ் கட்சி தோற்கடிக்க முயன்றது என்று இப்போது புரிந்துகொள்ள முடிகிறது” என்று தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் வாரங்கலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “எனது நாட்டில் தோலின் நிறத்தினை வைத்து மக்களின் திறமையினை தீர்மானிக்க முடியுமா? தோலின் நிறத்தினை வைத்து விளையாட இளவரசருக்கு யார் அனுமதி கொடுத்தது?
நான் இன்று மிகவும் கோபத்தில் இருக்கிறேன். என்னை யார் அவதூறாக பேசினாலும் நான் கோபப்படுவதில்லை. அதனை என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் இளவரசரின் (ராகுல் காந்தி) தத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ள மிகப் பெரிய அவதூறு என்னுள் கோபத்தை நிரப்பியுள்ளது. தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் சாசனத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆடுபவர்கள், நாட்டு மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமதிக்கிறார்களா? நாட்டு மக்கள் நிறத்தின் அடிப்படையில் அவமதிக்கப்படுவதை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. இதுகுறித்து இளவரசர் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும்.
இளவரசரின் மாமா அமெரிக்காவில் வசிக்கிறார் என்று இன்றுதான் நான் அறிந்து கொண்டேன். அந்த மாமா அவரின் தத்துவ ஆலோசகர் மற்றும் வழிகாட்டியுமாவார். இளவரசரின் அந்த வழிகாட்டி இன்று மிகப் பெரிய ரகசியத்தை இன்று உடைத்துள்ளார். கருமையான நிறம் கொண்டவர்கள் அனைவரும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். அதாவது அவர் (சாம் பிட்ரோடா) நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களை தோலின் நிறத்தினை வைத்து அவமதித்துள்ளார். தோலின் நிறம் என்னாவாக இருந்தால் என்ன? நம்மைப் போல தோல் நிறம் கொண்ட கடவுள் கிருஷ்ணரை நாட்டு மக்கள் வணங்குகின்றனர்” என்று பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக, கரிம்நகரில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர், “பல ஆண்டுகளாக காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) 5 தொழிலதிபர்களைப் பற்றி பேசினார். பின்னர் அம்பானி, அதானி பற்றி மட்டும் அவர் பேசத் தொடங்கினார். இப்போது அவர்கள் பற்றியும் பேசாமல் திடீர் மவுனம் காத்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ராகுல் காந்தி மற்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அம்பானி மற்றும் அதானி பற்றி அவதூறு பேசுவதை நிறுத்தி விட்டனர். ஏன்?
நான் காங்கிரஸ் இளவரசரிடம் (ராகுல் காந்தி) ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அம்பானி, அதானியிடமிருந்து நீங்கள் எவ்வளவு பணம் பெற்றீர்கள்? நடைபெறும் தேர்தலுக்காக அவர்களிடமிருந்து காங்கிரஸ் கட்சி எவ்வளவு நிதி பெற்றது? எத்தனை வாகனங்களில் பணத்தைப் பெற்றது? ஏதோ ஒன்று நடந்திருப்பதாக நான் உணர்கிறேன். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தேசத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். விரிவான வாசிப்புக்கு > “அம்பானி, அதானி குறித்து திடீர் மவுனம் ஏன்?” – ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கேள்வி